திருவனந்தபுரம்

நாட்டை உலுக்கி வரும் கேரள தங்கக் கடத்தல் தொடர்பாக தகவல் தொடர்பு துறை செயலாளர் சிவசங்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்..

சமீபத்தில் கேரள மாநிலத்தில் நடந்துள்ள விவகாரம் மேலும் பூதாகாரம் ஆகியுள்ளது. அமீரக தூதரகப் பெயரைப் பயன்படுத்தி தங்கம் கடத்தப்படுவதாக எழுந்துள்ள இந்த புகாரில் கேரள மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ் சிக்கியுள்ளார்.  இந்த வழக்கைத் தேசிய புலனாய்வுத் துறை (என் ஐ ஏ) விசாரித்து வருகிறது

இந்த விவகாரத்தில் ஸ்வப்னா சுரேஷ், அவரது நண்பர் சந்தீப், ரமீஷ் ஆகியோரை என் ஐ ஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.   தகவல் தொடர்புத் துறைச் செயலராகவும், கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலராகவும் இருந்த சிவசங்கருடன் ஸ்வப்னா தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.
மாநில முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தகவல் தொடர்புத் துறையில் பணியாற்றுபவர்கள் இதில் சிக்கியுள்ளதால் இந்த விவகாரம் கேரள மாநிலத்தில் கடும் புயலைக் கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர். ஆனால், தங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தகவல் தொடர்புத் துறைச் செயலராக இருக்கும் சிவசங்கரை பணியிடை நீக்கம் செய்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெறும் எனவும் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.  ஏற்கனவே, பினராயி விஜயனின் முதன்மைச் செயலர் பதவியில் இருந்து  சிவசங்கர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மற்றொரு ஐ.ஏ.எஸ். அதிகாரியான மிர் முகமது நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.