சென்னை: கேரளாவை உலுக்கிய தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் மற்றும் அவரது குடும்பத்திற்கு தொடர்பு இருப்பதாக வழக்கின் முக்கிய நபரான ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். இதற்கு பதில் தெரிவித்துள்ள முதல்வர் பினராயி விஜயன், இது அரசியல் சதி என்று கூறியுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி கேரளாவிற்கு  ஐக்கிய அரபு தூதரகத்தில் இருந்து 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்க கட்டிகள் பார்சலில் கடத்தி வரப்பட்டது.  இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கடத்தலில், அப்போதைய கேரள தலைமைச் செயலாளர் உள்பட பல முக்கிய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து,  கேரள அரசில் தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரியாக பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ், ஐஏஎஸ்   சிவசங்கர் ஆகியோர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் நேற்றைய விசாரணைக்க ஆஜரான ஸ்வப்னா சுரேஷ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள தங்கக்கடத்தல் வழக்கில், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் தொடர்புள்ளது.  பினராயி  விஜயன் கடந்த 2014ஆம் ஆண்டு துபாயில் இருந்த போது அவரது தனி செயல் அதிகாரியான ஐஏஎஸ் சிவசங்கரன் , தூதரகத்தில் செயலாளராக இருந்த என்னை தொடர்பு கொண்டு,  துபாய் செல்லும் போது முதலமைச்சர் தனது பைகளில் ஒன்றை மறந்து வைத்துவிட்டு வந்ததாகவும், அதை உடனடியாக கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்தார். நானும் தூதரக அதிகாரி மூலம் அந்த பையை துபாய்க்கு அனுப்பி வைத்தோம். அதில் ரூபாய் நோட்டுகள் என்பது பிறகு தெரிய வந்தது.  சிவசங்கரன் அறிவுறுத்தலின் பேரில் தூதரக அதிகாரி வீட்டில் இருந்து பிரியாணி பாத்திரங்கள் முதலமைச்சர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.   அதில் என்ன இருந்தது என்று தெரியாது என்றும் ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளார்.

அத்துடன் பினராயி  விஜயனின் மனைவி கமலா,  மகள் வீணா,  கூடுதல் தலைமை செயலாளர் ரவீந்திரன்,  முன்னாள் அதிகாரி நளினி ஆகியோருக்கும்  இதில் தொடர்பு உள்ளது என்று அவர் கூறியுள்ள அவர், தனது உயிருக்கு ஆபத்து என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளளதாக கூறினார். அத்துடன் செய்தியாளர்களிடம் தற்போது கூறிய அனைத்தும், ஏற்கனவே வாக்குமூலத்திலும் தெரிவித்து இருப்பதாக கூறினார்.

இதற்கு பதில் தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன்,  ஸ்வப்னா சுரேஷ்  குற்றச்சாட்டுக்கள் அரசியல் சதி  என விமர்சித்துள்ளார்.