திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள முக்கிய குற்றவாளயின ஸ்வனாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவை, குடும்பத்தோடு கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதாக நீதிமன்றத்தில் கூறினார். இதையடுத்து, அவருக்கு பாதுகாப்பு அளிக்க சிறைத்துறை டிஜிபிக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக்கடத்தல் வழக்கில், கேரள முதல்வரின் அலுவலக அதிகாரிகள் சம்பந்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் உடன் கேரள முதல்வரின் முன்னாள் தனிச்செயலாளர் சிவசங்கரன் உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தற்போது, ஸ்வப்னா திருவனந்தபுரத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கடந்த மாதம் ஸ்வப்னா பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், இந்த கடத்தல் வழக்கில், முதல்வரின் பெயரை கூறுமாறு தன்னை வலியுறுத்துவதாக கூறப்பட்டிருந்தது. இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த நிலையில் ஸ்வப்னா மற்றும் மற்றொரு குற்றவாளியான சரித்குமார் ஆகிய இருவரும் கடந்த ஒரு வாரமாகச் சுங்க இலாகாவில் காவலில் இருந்தனர். அப்போது அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது. தங்கள் இருவரும் தங்க கடத்தல் வழக்கில் பல முக்கிய ரகசியங்கள் குறித்துத் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த 4 நாட்களாக நீதிமன்றத்தில், ரகசிய வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.
ஸ்வப்னாவின் வாக்குமூலத்தில், திருவனந்தபுரம் சிறையில் இருக்கும்போது 4 போலீசார் தன்னை வந்து சந்தித்ததாகவும், அப்போது விசாரணை அதிகாரிகளிடம் எந்த முக்கிய தகவலையும் கூறக்கூடாது என்றும், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் பெயரைக் கூறினால் குடும்பத்தோடு தீர்த்துக்கட்டி விடுவோம் என்று மிரட்டியதாகவும் தெரிவித்திருந்ததாகவும், அதனால் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து ஸ்வப்னாவுக்கு உடனடியாக உரியப் பாதுகாப்பு அளிக்கக் கேரள சிறைத்துறை டிஜிபிக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே ஸ்வப்னாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தக் கேரள சிறைத்துறை தென்மண்டல டிஐஜிக்கு சிறைத்துறை டிஜிபி ரிஷி ராஜ் சிங் உத்தரவிட்டுள்ளார்.