திருவனந்தபுரம்: நாட்டிலேயே முதன்முறையாக மாநில சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை ‘லைவ்’ ஒளிபரப்பு செய்யும் வகையில் தனிச் சேனலை கேரளா மாநில அரசு தொடங்கி உள்ளது.

இந்தியாவில், மாநிலங்களவை, மக்களவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கு தனியாக சேனல் செயல்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை எந்தவொரு மாநிலமும், சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புச் செய்ய முன்வரவில்லை.
இந்த நிலையில், நாட்டிலேயே முதல்முறையாக கேரள மாநிலம், சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பு செய்து மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக புதிய சேனலை தொடங்கி உள்ளது.
மலையாளத்தின் சிங்கம் ஆண்டின் முதல்நாளான நேற்று இந்த சேனல் ஒளிபரப்பு தொடங்கியது. ‘சபா டிவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சேனல் தொடக்க விழா நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா காணொலி மூலம் பங்கேற்று தொடங்கி வைத்தார்.

அத்துடன், அதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தையும், சட்டப்பேரவை சபாநாயகர் பி. ஸ்ரீராம கிருஷ்ணன், முதல்வர் பினராயி விஜயன் சேர்ந்து தொடங்கி வைத்தனர்.
மேலும் இந்த சேனலில், மாநிலத்தின் பல்வேறு கலைகளையும், கலாச்சாரங்களையும் விளக்கும் வகையில் பிரத்யேக திரைப்படங்களும் இந்தச் சேனலில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Patrikai.com official YouTube Channel