கேரளாவைச் சேர்ந்த டாக்டர் அஷ்ரஃப் கடக்கல் என்பவர் முகநூலில் வெளியிட்டிருக்கும் ஒரு நைட்டி அணிந்த பெரியவரின் கதை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரதமர் மோடியின் நாற்காலி பிடுங்கப்படும் வரை தலையில் முடி வளர்க்க மாட்டேன் என தனது ஒரு பக்க தலைமுடியை மட்டும் மழித்துக் கொண்டுள்ளார். யார் இவர்? ஏன் அப்படி செய்தார்? என்பதை விளக்குகிறது டாக்டர் அஷ்ரஃபின் முகநூல் பதிவு
அந்த பெரியவரே பேசுவது போல அந்த பதிவு எழுதப்பட்டுள்ளது.
“என் பெயர் யாகியா, என்னை யாஹிகாக்கா என்று அழைப்பார்கள். கேரளாவில் உள்ள கொல்லம் அருகேயுள்ள கடக்கல் முக்குன்னம் என்ற இடத்தில் ஒரு ஃபாஸ்ட் ஃபுட் கடை வைத்திருக்கிறேன். தற்பொழுது எனக்கு 70 வயதாகிறது. எனக்கு இரு வயது வந்த பெண் பிள்ளைகள் உண்டு,
தென்னை மரம் ஏறுவது, வயலில் வேலை செய்வது முதலில் நான் செய்த தொழிலாக இருந்தது. இந்த தொழிலை வைத்துக்கொண்டு தனது மகள்களை கரையேற்ற முடியாது என்று எண்ணியதால் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு சென்றேன். அங்கும் வாழ்க்கை மிக கடினமாக செல்லவே அங்கிருந்து சேர்த்த சிறுதொகையை எடுத்துக்கொண்டு நாடு திரும்பினேன்.
அந்தப் பணத்தைக் கொண்டு ஒரு சின்ன ஃபாச் ஃபுட் கடையை துவங்கினேன். பீஃப் மற்றும் சிக்கன் ஃப்ரை எனது கடையில் ஸ்பெஷல் ஆகும். வேலை செய்ய எளிதாக இருக்கிறது என்பதற்காக நைட்டி அணிந்து கொண்டேன். எனது வித்தியாசமான தோற்றத்தை காணவும், நாட்டு நடப்புகளைக் குறித்து நான் அடிக்கும் ஜோக்குகளைக் கேட்கவும் பலர் கடைக்கு வந்தனர். கடின உழைப்பினால் ஒருவழியாக கஷ்டப்பட்டு எனது முதல் மகளின் திருமணத்தை நடத்தி முடித்தேன்.
எனது அடுத்த மகளின் திருமணத்துக்காக பாடு பட்டு கொஞ்சம் கொஞ்சமாக 23,000 ரொக்கமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களாக சேர்த்து வைத்திருந்தேன். இந்த நேரத்தில் பிரதமர் மோடியின் திடீர் நோட்டுத்தடையை அறிவிக்க எனது பணத்தை எடுத்துக்கொண்டு வங்கிக்கு ஓடினேன். எனக்கு அக்கவுண்ட் இருந்தது கூட்டுறவு வங்கியில்தான். கூட்டுறவு வங்கியில் பணம் மாற்ற முடியாது. அந்த வங்கிகள் முழுக்க முழுக்க முடக்கப்பட்டிருந்தன. என்னால் அந்த 23,000 பணத்தை ஒன்றுமே செய்ய முடியவில்லை.
அருகிலிருந்த வங்கிகளில் பணத்தை மாற்ற பல நாட்கள் பல மணி நேரங்கள் வரிசையில் நின்றதால் உடலில் சர்க்கரை அளவு குறைந்து மயங்கி விழுந்தேன். சில நல்லவர்கள் என்னை மருத்துவமனைக்கு கொண்டுபோய் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் இருந்து திரும்பினேன். எனது அடுப்பை பற்றவைத்து அந்த 23,000 ரூபாயையும் தீயில் போட்டு பொசுக்கினேன். நேராக சலூனுக்கு சென்று எனது பாதி தலையை மழித்துக் கொண்டேன். இனி மோடி பதவி இறங்கும் வரை முடி வளர்க்க மாட்டேன்”
பதிவை எழுதிய டாக்டர் அஷ்ரஃப் இவ்வாறு தனது பதிவை முடித்திருந்தார். ” அன்புள்ள யாஹிகாக்கா, இவ்வளவு நாள் உங்களை ஒரு கோமாளிபோல பார்த்ததற்கு மன்னியுங்கள். உங்கள் போராட்டம் நியாயமானது, வலிமையானது. எதிர்கட்சிகள் நாடு முழுவதும் 28-ஆம் தேதி நடத்திய பந்தை விட உங்கள் போராட்டம் மிக வலிமையானது. ஏனென்றால் நீங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டவர்” என்று எழுதியிருந்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் அஷ்ரஃப், “யாஹிக்காக்கா ரெகுலராக செய்தித்தாள்கள் படிப்பார். அவருக்கு எல்லா விஷயங்களிலும் ஒரு தீர்க்கமான நிலைப்பாடு இருக்கும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.