எர்ணாகுளம்: தலைநகர் டெல்லியில், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிவரும் விவசாயிகளுக்காக, கேரள விவசாயிகள் அமைப்பொன்று ஒரு லாரி நிறைய அன்னாசி பழங்களை அனுப்பி வைத்துள்ளது.
அவர்களின் இந்த செயல், சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
கேரள அன்னாசிப்பழ விவசாயிகள் சங்கம் என்ற அமைப்பு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த விவசாயிகள் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள வாழகுளம் அம்மாநிலத்தின் மிக முக்கிய அன்னாசிப் பழ சந்தையாகும். இதை அன்னாசிப்பழ நகரம் என்றே அழைப்பார்கள்.
அந்த அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் ஜார்ஜ் கூறியதாவது, “வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்காக நம்மால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தபோது, இந்த எண்ணம் தோன்றியது.
இது, ஏதோ பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளினுடைய போராட்டம் மட்டுமல்ல; இந்தியாவின் ஒட்டுமொத்த விவசாயிகளினுடையதும்தான். எனவேதான், இந்த வழியில் எங்களின் ஆதரவை அவர்களுக்குத் தெரிவித்தோம்” என்றார்.