எர்ணாகுளம்
5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்தவுக்கு கேரள நீதிமன்றம் தூக்கு தண்டனை அளித்துள்ளது.
கடந்த ஜூலை 28 ஆம் தேதி கேரளாவின் ஆலுவா மாவட்டம் முக்கம் பகுதியில் வசித்து வந்த பீகார் மாநில தம்பதியின் 5 வயது மகள் வீட்டில் இருந்து மாயமானார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாயமான சிறுமியைத் தேடி வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதேபகுதியில் வசித்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி அஸ்பக் ஆலமிடம் காவலர் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், அஸ்பக் ஆலம் சிறுமியைக் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. சிறுமியின் உடலை ஆலுவா மார்க்கெட்டிற்கு பின்புறம் உள்ள குப்பைக்கிடங்கில் அஸ்பக் வீசியுள்ளார். 20 மணி நேரத் தேடுதலுக்குப் பின் சிறுமியின் உடலை காவல்துறை மீட்டது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற அஸ்பக் ஆலம் மீது பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கின் விசாரணை எர்ணாகுளத்தில் உள்ள போக்சோ நீதிமன்ரத்தில்ல் நடைபெற்று வந்தது.
சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் அஸ்பக் ஆலம் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து, குற்றவாளி அஸ்பக் ஆலமிற்கு தூக்குத்தண்டனை விதித்தது. மேலும் குற்றவாளி அஸ்பக் ஆலமிற்கு 5 ஆயுள் தண்டனைகளையும் 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
வழக்கு விசாரணை தொடங்கி 110 நாட்களில் எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.