பிறந்து 2 நாளே ஆன பெண் குழந்தையை தேவாலயத்தில் பெற்றோர் விட்டுச்செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி கேரளாவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் எடப்பள்ளியில் ஒரு தேவாலயம் உள்ளது. இங்குதான் பச்சிளம் குழந்தையை பெற்றோரை போட்டுவிட்டுச் செல்லும் கொடுமை நடந்துள்ளது. இந்தக் காட்சி தேவாலய சி.சி. டிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த சி.சி.டிவி காட்சியில், தேவாலயத்துக்குள் ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு பெண்மணி வருகிறார். அவர் ஆலயத்திற்குள் வந்த பின்னர் குழந்தையை பெற்றுக்கொண்ட கணவர், யாரும் இல்லாத இடத்திற்கு குழந்தையை தூக்கிச்செல்கிறார். நடந்து செல்லும்போது யாரேனும் பார்க்கின்றனரா என்று நோட்டமிட்டபடியே செல்கிறார். அதன்பிறகு அங்கிருக்கும் தூண் ஒன்றின் பின்னால் செல்லும் அவர், தனது குழந்தையின் நெற்றியில் ஏக்கத்துடன் முத்தமிடுகிறார்.
பிறகு அந்தப் பிஞ்சுப் பெண் குழந்தையை தனியாக, தரையில் வைத்துவிட்டுச் செல்கிறார்
இந்தக் காட்சிகள் காண்போரின் மனதை உருக வைப்பதாக உள்ளது.
தேவாலயத்தில் போடப்பட்ட அந்த குழந்தையைக் கண்டவர்கள், நிர்வாகத்திடம் தெரிவித்தனர். குழந்தையை தேடி யாரும் வராததாலும் குழந்தையை விட்டுச்சென்றது யார் என தெரியாததாலும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் தான், தேவாலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது.
அதில்தான் இந்த காட்சிகள் இருந்தன.
காவல்துறை விசாரணையில் அந்தத் தம்பதியினருக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் இருப்பதாகவும், நான்காவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் விட்டுச்சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.