சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கில் தீர்ப்பு வரும் வரை, பெண்களை அனுமதிக்க கூடாது என்றும், ஒருவேளை பெண்களை அனுமதிக்கும் முடிவை கேரள அரசு மேற்கொண்டால் அது புதிய போராட்டத்தையே வெடிக்க செய்யும் என்றும் அம்மாநில காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என செப்டம்பர் 28, 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்சாந்தி கண்டரரு ராஜீவரரு தரப்பு உட்பட 65 பேர் தரப்பில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இச்சீராய்வு மனுக்கள் மீது, தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கன்வில்கர், இந்து மல்ஹோத்ரா, ரோஹின்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகளில் இருவர் பழைய தீர்ப்பு தொடரும் என்றும், மூவர் பெண்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என்றும் கருத்துக்களை தெரிவித்ததால், வழக்கை 7 அல்லது அதைவிட பெரிய அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது.
இந்நிலையில், இது தொடர்பாக பாஜக முன்னாள் கேரள மாநில தலைவரான கும்மனம் ராஜசேகரன் செய்தியாளர்களிடம், “மாநில அரசு நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். வழக்கில் இடைக்கால தடை தொடர்பாக எந்த தெளிவும் இல்லாத நிலையை பயன்படுத்தி, பெண்களை சபரிமலை சன்னிதானத்திற்குள் அனுமதிக்க கூடாது. பெண்களை வலுக்கட்டாயமாக சபரிமலைக்கு அனுப்புவதை கேரள அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும், இல்லையெனில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல காங்கிரஸ் சார்பில் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரான உம்மன் சாண்டி, “சட்டத்தின் எல்லைக்குட்பட்ட, இவ்விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு முன்னணி எடுத்த நிலைபாட்டை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது. கடந்த ஆண்டு போல இல்லாமல், இந்த ஆண்டாவது சமூகமாக ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று, திரும்பவதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கேரள சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ரமேஷ் சென்னிதாலா, “உச்சநீதிமன்றத்தின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இதையும் மீறி பெண்களை கேரள அரசு கட்டாயமாக சபரிமலைக்கு அனுப்புமேயானால், அது போராட்டத்தை தான் தூண்டும். ஆங்காங்கே போராட்டங்கள் வெடிக்காமல் இருக்க, கேரள அரசு பக்தர்களோட சுமூக போக்கை கடைபிடித்தால் மட்டுமே சாத்தியம். கேரள அரசு அதை செய்யும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்