திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா, டிஒய்எப்ஐ தலைவர் முகம்மது ரியாசை திருமணம் செய்ய உள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா தைய்யகண்டில், சிபிஎம்மின் இளைஞர் பிரிவான இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் முகமது ரியாசுடன் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருமண விழா ஜூன் 15 அன்று அவர்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. பினராயி விஜயன் மற்றும் கமலா விஜயனின் மூத்த மகள் வீணா, பெங்களூருவைச் சேர்ந்த ஐ.டி தொழில்முனைவோர் ஆவார்.
பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் அரசியலில் நுழைந்த முகம்மது ரியாஸ், இதற்கு முன்பு டி.ஒய்.எஃப்.ஐயின் தேசிய இணை செயலாளராக இருந்தார். அவர் பிப்ரவரி 2017 இல் டிஒய்எப்ஐ தலைவராக நியமிக்கப்பட்டார்.
2009 மக்களவைத் தேர்தலில், ரியாஸ் சிபிஐ (எம்) வேட்பாளராக கோழிக்கோடு தொகுதியில் இருந்து போட்டியிட்டு, 800 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.
ஆரக்கிள் நிறுவனத்தில் பணிபுரிந்த வீனா, பின்னர் ஆர்.பி. டெக்ஸாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர், 6 ஆண்டுகளுக்கு முன்பு எக்ஸலோகிக் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இது வீணா மற்றும் ரியாசின் இரண்டாவது திருமணம் ஆகும்.