திருவனந்தபுரம்: மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கு வெளிப்படையான முறையில் ஆட்கள் சேர்க்கும் நடவடிக்கைக்காக புதிய வாரியத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்துள்ளார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் அரசுத்துறை பணிகளுக்காக டிஎன்பிஎஸ்சி உள்பட பல்வேறு துறைகள் செயல்பமுடுத்தப்பட்டு வருகின்றன. அதுபோல கேரள மாநிலத்திலும்  அரசு பணிகளுக்காக கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாநில பொதுத்துறை நிறுவனங்களில் வெளிப்படையான வேலை ஆட்சேர்ப்பு செயல்முறைகளுக்கான புதிய வாரியத்தை கேரள முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் திறமையான நபர்களை வெளிப்படையான ஆட்சேர்ப்பு செயல்முறை மூலம் பணியமர்த்துவதற்காக மாநில அரசால்  தன்னாட்சி வாரியம் நிறுவப்பட்டுள்ளது. இந்த வாரியத்தை  கேரள முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய முதலமைச்சர் விஜயன், பொதுத்துறை நிறுவனங்கள் சிறந்த வருவாய் மற்றும் லாபத்தை அடைவதற்கு உதவுவதற்காக இந்த வாரியம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்சேர்ப்பு நடைமுறையில் இடஒதுக்கீடு கொள்கையும் கடைபிடிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இந்த வாரியம்,  கேரள  மாநிலத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் என்றும்,  முதலாவதாக, தொழில் மற்றும் வணிகத் துறையின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் ஆட்சேர்ப்பு அதிகாரம் வழங்கப்படுவதுடன், கூடுதலாக, பிற துறைகளின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்களும் ஆட்சேர்ப்பு நோக்கங்களுக்காக இதன் சேவைகளைப் பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.