ர்ணாகுளம்

பாஜகவை வீழ்த்த அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

நாடெங்கும் பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.   உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன.    அதைப் போல் மேற்கு வங்க முதல்வரும் திருணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்க முயன்று வருகிறார்.

மகாராஷ்டிரா மாநில ஆளும் கட்சி கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி மம்தாவின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறது.   காங்கிரஸ் இல்லாமல் பாஜகவை எதிர்க்க முடியாது என கருத்து கூறி வரும் சிவசேனா மற்றும் தேசிய வாத காங்கிரஸ் இந்த கூட்டணியில் காங்கிரஸை இணைப்பது மிகவும் அவசியம் எனத் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் எர்ணாகுளம் மாவட்டம் கமலசேரியில் நேற்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு நடந்தது.  இந்த மாநாட்டை கேரள முதல்வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினருமான பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.   இந்த மாநாட்டில் பினராயி விஜயன் உரையாற்றினார்.

பினராயி விஜயன், “காங்கிரஸ் கட்சி தன்னை மதச்சார்பற்ற கட்சி எனக் கூறிக் கொண்டு வகுப்பு வாதிகளைத் திருப்திப் படுத்தும் வகையில் உள்ளது.  மத்தியில் பாஜக அரசு கடைப்பிடிக்கும் பொருளாதார கொள்கைகளில் காங்கிரஸும் உடன்படுகிறது.  எனவே மற்ற மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.