திருவனந்தபுரம்: கேரளாவில் 23 ஆண்டுகளில் இல்லாத அளவு இப்போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
2 பேரழிவு வெள்ளத்துக்கு பிறகு, கேரளா மாநிலமானது 23 ஆண்டுகளில் உள்நாட்டு மற்றும் மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்தது.
2019ம் ஆண்டில் 1.96 கோடி பார்வையாளர்கள் வந்திருக்கின்றனர். கிட்டத்தட்ட 17.2 சதவீதம் என்ற வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. சுற்றுலாவால் கிடைத்த மொத்த வருவாய் ரூ .45,010.69 கோடி. இது முந்தைய ஆண்டை விட 24.14 சதவீதம் அதிகமாகும்.
மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.95 கோடிக்கு மேல் இருக்கிறது, அதில் 1.83 கோடி உள்நாட்டில் இருந்தும், வெளிநாட்டில் இருந்து 11.89 லட்சம் பேர் வந்துள்ளனர் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சுற்றுலா அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறி இருப்பதாவது: 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக 2 ஆண்டுகளாக வெள்ளம் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பின்னர் நாங்கள் மிகுந்த வீரியத்துடன் திரும்பி வந்தோம்.
இது 1996 க்குப் பிறகு மிக உயர்ந்த வளர்ச்சி விகிதமாகும். எங்கள் புள்ளிவிவரங்கள் 2019 மே முதல் மிகவும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு விகிதம் இருப்பதை காட்டுகின்றது.
இந்த ஆண்டு வளர்ச்சி வேகத்தை தக்கவைத்துக்கொள்வதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம், ஆனால் கொரோனா வைரசுக்கு மருத்துவ உலகம் எவ்வளவு விரைவாக ஒரு தீர்வை காண்கிறது என்பதை பொறுத்தே இது அமையும் என்றார்.