திருவனந்தபுரம்: கேரள பிஷப் ஜோசப் கல்லரங்கட் (Bishop Joseph Kallarangatt) என்பவர், ‘நார்கோடிக்ஸ் ஜிகாத்’ என்ற பெயரில் கேரள இஸ்லாமியர்கள், பிற மதத்தினவரை போதைப்பொருளுக்கு அடிமையாக்கி வருகின்றனர் என நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் நார்கோடிக்ஸ் ஜிகாத் என்ற புது வார்த்தையை இப்போது தான் கேள்விப்படுகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.
கேரளா மாநிலத்தின் பாலா எனும் பகுதியில் சைரோ மலபார் கத்தோலிக்க பேராலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் பிஷப்பாக ஜோசப் கல்லரங்கட் என்பவர் இருந்து வருகிறார். இவர் கடந்த புதனன்று கோட்டயம் மாவட்டத்திலுள்ள மார்த் மரியம் தேவாலயத்தில் பேசிய போது, “கேரளாவில் உள்ள முஸ்லிம்களால், மற்ற மத இளைஞர்கள், லவ் ஜிகாத் மற்றும் நார்கோடிக்ஸ் ஜிகாத் போன்றவற்றால் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். நார்கோடிக்ஸ் ஜிகாத் என்ற பெயரில் பல இளைஞர் களை போதைக்கு அடிமையாக்கி வருகின்றனர். இதனால், பல இளைஞர்கள் படிப்பை கைவிட்டு உள்ளதுடன், ஏராளமானோர் வேலையிழந்தும் வருகின்றனர். நம் நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதங்கள் ஏந்தி போராட முடியாது என்பதால், முஸ்லிம்கள், மற்ற மதத்தினரை நசுக்கும் வகையில் அவர்களை போதைக்கு அடிமையாக்கி வருகின்றனர் என்று கூறினார். அதுபோலவே, லவ் ஜிகாத் என்ற பெயரில் முஸ்லிம் அல்லாத பெண்கள் குறிப்பாக கிறிஸ்தவ பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மதமாற்றம் செய்து, அவர்களை நாசப்படுத்தி தீவிரவாத செயல்களுக்காகவும் பயன்படுத்தி வருவதாக பாதிரியார் கூறினார்.
பாதிரியாரின் பேச்சு, மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது கருத்து, முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர்கள் கண்டித்துள்ளனர். பாதிரியாரின் பேச்சு இஸ்லாமிய இயக்கங்கள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “நார்கோடிக்ஸ்க்கு (போதைப் பொருள்) என எந்த மதச்சாயமும் கிடையாது. அது சமூக விரோதிகளின் சாயம் மட்டுமே கொண்டுள்ளது. நார்கோடிக்ஸ் ஜிகாத் என்ற புது வார்த்தையை இப்போது தான் கேள்விப்படுகிறேன். போதைப் பொருளால் ஒரு மதத்துக்கு மட்டும் பாதிப்பு கிடையாது, அது சமூகத்தையே சீரழிக்கிறது. அது கவலையளிக்ககூடிய ஒன்று, அதற்கெதிரான சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளோம் என்றார்.
பாதிரியார் என்ன அர்த்தத்தில் இதனை கூறினார் என புரியவில்லை. பொறுப்பான மனிதர்கள் அடிப்படை ஆதாரமற்ற உண்மைக்கு புறம்பான இதுபோன்ற பொறுப்பற்ற விஷயங்களை பேசக்கூடாது. இதனால் மதநல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படும் என்றும் கண்டித்தார்.
கேரளாவில் ஏற்கனவே லவ்ஜிகாத் எனப்படும் மாற்று மதத்தினரை காதலிக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது நார்கோடிக்ஸ் ஜிகாத் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.