தேசிய / மாநில நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் இருக்கத் தடை செய்யவேண்டும் என “அரைவ் சேஃப் (Arrive safe)” எனும் அரசு சாரா தொண்டு நிறுவனத்தால் (NGO) உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு (பொது நலன் வழக்கு) தாக்கல் செய்யப் பட்டது. நம் நாட்டில் ஆண்டுதோறும் 1.42 லட்சம் சாலை விபத்து மரணங்கள் பெரும்பான்மை மதுவினால் ஏற்படுகின்றது என வாதிக்கப் பட்டது. உயிர் பாதுகாப்பை காரணம்காட்டி நெடுஞ்சாலைகளின் 500 மீட்டர் தூரத்திற்குள் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் இருக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மாநில நெடுஞ்சாலைகள், முக்கிய நகரங்களில் பல முக்கிய சாலைகளில் (உதாரணமாய், சென்னை நகரில் மவுண்ட் சாலை) உள்ள பல பார்கள் மற்றும் ஐந்து நட்சத்திரங்கள் விடுதிகள் கூட மதுபானம் பரிமாறும் சேவையை நிறுத்த வேண்டியிருந்தது.
அவ்வாறு , கடை மூடும் சூழல் ஏற்பட்டதை எப்படி சமாளிப்பது என சரக்கடித்துக் கொண்டே கடுமையாக யோசித்த ஒரு பார் உரிமையாளருக்கு ஒரு திட்டம் மனதில் உதிர்த்தது. அதனை செயல்படுத்த அவருக்கு இரண்டு லட்ச ரூபாய் செலவானது. ஆனால், அவரது திட்டம் மிகவும் சாமர்த்தியமானது. அவர் என்ன செய்தார் தெரியுமா.. ? தொடர்ந்து படியுங்கள்.
கேரளாவில், தேசிய நெடுஞ்சாலை 17 அமைந்துள்ள ஐஷ்வர்யா ரெஸ்டோபார் எனும் மதுபானக்கடையினர் தங்கள் கடைக்கு வாடிக்கையாளர் வரும் பாதையை மாற்றி அமைத்துள்ளனர். அதன்படி, நெடுஞ்சாலையில் இருந்து தற்போது 500 மீட்டருக்கும் அதிக தூரத்தில் அமைந்துள்ளது.
பார் உரிமையாளர் படத்தில் உள்ளது போல் புதிர்ப் பாதை போன்று கட்ட முன்வந்தார்., இதன் மூலம், அவரது பாரை அடையும் தூரம் சுமார் 250- 300 மீட்டர் அதிகரித்துள்ளது.
பார் மேலாளர் ஷோஜி “ இந்த புதிர்ப் பாதையை கட்டிமுடிக்க எங்களுக்கு ரூ 2 லட்சம் செலவானது” என்றார்.
இதே போன்று, உச்ச நீதிமன்ற உத்தரவைச் சமாளிக்க, இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலைகளில் உள்ள பார்கள் தங்களின் பாதையை சற்று மாற்றியமைத்துள்ளன. டெல்லி அருகிலுள்ள குர்கானில் சைபர் ஹப் எனும் வணிகவளாகம் தன் வாசலை நெடுஞ்சாலை இருந்து 1 கி.மி. தூரத்தில் இருப்பது போல் மாற்றியமைத்துள்ளது.
இந்த புதிர்ப்பாதையால் சில நன்மைகளுமுண்டு. அது, நீங்கள் குடித்துவிட்டு எவ்வளவு நிதானமாக உள்ளீர்கள் என்பதை அளவிட உதவும். உங்களால், வெற்றிகரமாக வெளிவர முடிந்தால், நீங்கள் நிதானமாக உள்ளீர்கள், ஒருவேலை தடுமாறினால், ஒரு ஆட்டோ/ கால்டேக்ஸியை அழைத்துவிடுவது, பத்திரமாய் வீடு செல்ல உதவும்!
நன்றி: தி நியூஸ் மினுட்