டில்லி,

இந்தியர்கள் ஒரே மாதிரியான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து ஒரு கட்டத்தில் சோர்வடைந்து விடுகிறார்கள் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு நாளும் நாம் காலையில் அலுவலகம் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பியதும் அலுவலகப்பணிகளில் இருக்கும் அரசியல் மற்றும் சிக்கல்கள் குறித்து மற்றவர்களிடம் வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். பின்னர் காலையில் எழுந்து மீண்டும் அதே அலுவலகப் பணிக்குச் செல்கிறோம். இப்படி திரும்ப திரும்ப  பிடிக்காத  ஒரு வாழ்க்கையை  வாழ்ந்து வருவதை ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

கடந்த ஜூன்மாதம் மின்டல் என்ற பன்னாட்டுச் சந்தை நிறுவனம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிபரப்படி, இந்தியாவில் அலுவலகப் பணிகளுக்குச் செல்வோரில் 5 ல் ஒருவர் 18 வயதிலிருந்து 64 வயது வரையுள்ளவர்கள் என்றும் மொத்தப் பணியாளர்களில் இவர்கள் 22 சதவிதம் பேர் என்கிறது ஆய்வு.                             அலுவலகம் செல்லும் பெண்பணியாளர்களில் இந்த வயதுடையவர்கள் 25 சதவிதம் பேர் என்று சொல்லப்படுகிறது. காற்று, தண்ணீர், போன்றவற்றில் மாசு அதிகரித்திருப்பது போன்றவை உடல்நிலையை மோசமடைய செய்கின்றன.

இரவுப்பணிகளும், பின்னிரவுப் பணிகளும் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் நம்மை வந்தடைய காரணமாக உள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலாவுக்கு அதிகளவில்  செல்லாத  மக்கள் வாழும் நாடுகளில் உலகளவில் இந்தியாவுக்கு 4 ம் இடம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு புள்ளி விபரமாகும். ஒவ்வொரு வாரமும் இந்தியர்கள் 52 மணி நேரம் உழைக்கிறார்கள் என்றும் இது மற்ற நாட்டு மக்கள் உழைக்கும் நேரத்தைவிட அதிகம் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியர்களாகிய நாம், உடலை பாதிக்கும் வேலைப் பளு, பணி நேரம்,  பணிச் சூழல் போன்ற பல்வேறு விசயங்கள் குறித்து நன்கு ஆலோசித்து முடிவு எடுக்கவேண்டிய காலகட்டம் இது.