திருவனந்தபுரம்:  தமிழகத்தைப்போல கேரளாவிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களை கவரும் வகையில் பல உணவகங்களில் வண்ணமயமான தேர்தல் சின்னங்களுடன், தோசைகள், புட்டுக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கேரள மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. அங்கு வேட்புமனுத்தாக்கல் முடிந்து இன்று வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் வெளியாகிறது. தேர்தல் காரணமாக, அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ஓட்டல் வணிகர்களும், தங்களது பங்குக்கு அரசியல் கட்சிகளின் சின்னத்துடன் கொண்ட தோசை, புட்டுக்கள் போன்றவற்றை தயார் செய்து, வாடிக்கையாளர்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றன.

திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டத்தில் சில கடைகளில்,  தக்காளி சாஸ், கேரட், மயோனிஸ் ஆகியவற்றைக் கொண்டு, அங்குள்ள தேர்தல் சின்னங்களான கம்யூனிஸ்டு கட்சிகள்  அரிவாள், சுத்தி, நட்சத்திரம் அடங்கிய சின்னமும்; பொடிசாக நறுக்கப்பட்ட கேரட்டின் மூலம் பாஜகவின் தாமரை சின்னம், அதுபோல, காஙகிரஸ் கட்சியின் கை சின்னமும் வண்ணமயமாக பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

அதுபோல கேரள மக்களின் பாரம்பரிய உணவான புட்டுவின் மேல்புறத்திலும், கட்சிக்கொடிகளின் வண்ணங்கள் இருக்கும் வகையில், தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுபோன்ற புட்டு மற்றும் தோசைகளுக்கு கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுபோன்று வித்தியாசமான முறையில் தோசையை அறிமுக்கப்படுத்திய ஓட்டலானது, கொல்லம் கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. ‘101 வெரைட்டி தோசை’ எனும் கடையில் விற்கப்படும் கட்சிச் சின்னம் பொறிக்கப்பட்ட நறுமணம் மிக்க தோசை மக்களை ஈர்த்து வருகிறது. இதைத்தொடர்ந்து தற்போது மாநிலத்தின் பல பகுதிகளில் வண்ணமயமான கட்சி சின்னங்கள் பொறிக்கப்பட்ட தோசைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கேரள அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சுடசுடச் கட்சி சின்னத்துடனான தோசை விற்பனையும் சூடுபிடித்துள்ளதாம்.