திருவனந்தபுரம்

கேரள அரசின் கேரளா ஃபபர் ஆப்டிக் நெட் ஒர்க் முதல் கட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

ஃபைபர் ஆப்டிக் நெட் ஒர்க் என்பது இணையத்தை வழங்கும் கம்பி வடத் தொடர்பு ஆகும்.    இதன் மூலம் வேகமான இணையத்தைப் பெற முடியும்.    இவ்வாறு இணையத்தை மாநிலம் முழுவதும் அளிக்கக் கேரள அரசு முடிவு செய்தது.   இதற்காக கேரள மின்வரியக் கம்பங்கள் மற்றும் கோபுரங்களைப் பயன்படுத்த முடிவு செய்தது.  இதற்கு கேஃபோன் எனப் பெயரிடப்பட்டது.

இந்த இணைப்பு மூலம் இணையச் சேவைக்கான செலவு வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கேரள அரசு வேகமான இணையச் சேவையை கேஃபோன் மூலம் அரசு நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளுக்கும்  சுமார் 20 லட்சம் பொருளாதார நலிவுற்ற குடும்பங்களுக்கும் வழங்க உள்ளது.

இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், “இந்த  கேஃபோன் திட்டத்துக்கான பணிகள் சுமார் 28000 கிமீ தூரத்துக்கு முடிவடைந்துள்ளது.  எனவே தற்போது இத்திட்டத்தின் முதல் கட்டம் முடிவடையும் தருவாயில் உள்ளது.  இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு, இணைய அமைப்பு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல பணிகள் துரிதமாகும்.

சுமார் 30000 க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில்  10 எம்பிபிஎஸ் முதல் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் இணையச் சேவை கிடைக்கும்.  அத்துடன் அனைத்து அரசு பணிகளும் இதன் மூலம் டிஜிட்டல் ஆக்கப்படும்.  இணையச் சேவை அளிப்போர் மற்றும் கேபிள்டிவி சேவை அளிப்போரும் இதை பயன்படுத்தலாம்.   வரும் 2020 ஆம் வருடம் டிசம்பருக்குள் இந்த சேவை மாநிலம் முழுவதும் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.