டில்லி

பாஜக எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தப் பொய் வழக்குப் போடுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார்.

கடந்த 4-ந் தேதி அமலாக்கத்துறை டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர். சஞ்சய்சிங்கை கைது செய்தது., இது குறித்து டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலிடம் செய்தியாளர்கள் கேள்விகள் கேட்டனர்.

அதற்கு அரவிந்த் கெஜ்ரிவால்,

”மத்தியில் ஆளும் பாஜகவினர் டில்லியில் முதலில்,பேருந்து வாங்கியதில் ஊழல் என்று கூறினர். பிறகு வகுப்பறை கட்டியதில் ஊழல், மின்சார ஊழல், சாலை போடுவதில் ஊழல், குடிநீர் வினியோகத்தில் ஊழல் என்று கூறி  எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே மதுபான ஊழலும் புனையப்பட்ட வழக்கு தான்.

பணப் பரிமாற்றம் எதுவும் இதில் நடக்கவில்லை. இந்த வழக்கிலும் எந்த ஊழலும் நடக்கவில்லை என்று தெரிந்தவுடன், வேறு ஒரு ஊழலைக் கொண்டு வருவார்கள்   நீதிமன்றத்தில் காட்ட  விசாரணை அமைப்புகளிடம் எந்த ஆதாரமும் இல்லை. எதிர்க்கட்சிகளை விசாரணை அமைப்புகளிடம் மாட்டி விடுவதுதான் பாஜகவின் நோக்கமாகும். பாஜகவினர் வேலை செய்வதில்லை மற்றவர்களையும் வேலை செய்ய விடுவதில்லை.

பாஜக அரசால் எதிர்க்கட்சிகளையும், எதிர்க்கட்சி தலைவர்களையும் அடக்கவும், அச்சுறுத்தவும் பொய் வழக்குகள் போடப்பட்டு கட்சிகளை உடைத்து பாஜகவில் ஆட்களைச் சேர்க்கிறார்கள்., ஜனநாயகத்துக்கு இது நல்லதல்ல. 

பாஜகவால் அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, தொழிலதிபர்களும் குறி வைக்கப்படுகிறார்கள். இதனால் அரசியலில் மட்டுமின்றி, தொழில் மற்றும் வர்த்தக துறைகளிலும் பீதியான சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. மத்திய அரசு இப்படி இருந்தால் நாடு முன்னேறாது.” 

என்று பதில் அளித்துள்ளார்.