டில்லி

டில்லியில் காட்டு ராஜ்ஜியம் நடப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பேட்டியில் கூறி உள்ளார்.

கடந்த சனிக்கிழமை அன்று டில்லியில் உள்ள பிரகதி மைதான சுரங்கப்பாதையில் டெலிவரி ஏஜெண்டு ஒருவர், அவரது கூட்டாளி ஒருவர் என 2 பேரை மோட்டார் சைக்கிளில் வந்த 4 வழிப்பறி கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் மறித்து ரூ.2 லட்சம் கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இந்த கொள்ளையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டில்லியின் சட்டம், ஒழுங்கு மத்திய அரசின் பொறுப்பில் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

டில்லியில் நேற்று மின்சார வாகனங்களுக்கு ‘சார்ஜ்’ ஏற்றுகிற நிலையங்களை முதல்-மந்திரி கெஜ்ரிவால் தொடங்கி வைத்து, நிருபர்களிடம் பேசினார். –

அப்போது ”டில்லி பிரகதி மைதான சுரங்கப்பாதையில் வழிப்பறி கொள்ளைச் சம்பவம் நடந்து இருக்கிறது.  ஜி 20 உச்சி மாநாடு இந்த சுரங்கப்பாதை அருகே தான் நடக்க இருக்கிறது. டில்லியில் மக்கள் பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுவதாக உணர்கிறார்கள். இங்குக் காட்டு ராஜ்ஜியம் நடக்கிறது.

டில்லி அரசின் பணிகளைத் தடுத்து நிறுத்துவதில் மத்திய அரசும், துணை நிலை ஆளுநரும் தங்கள் முழு சக்தியையும் ஈடுபடுவதால்தான் டில்லியின் தற்போதைய சட்டம், ஒழுங்கு பிரச்சினை இப்படி ஆகி உள்ளது.

மத்திய அரசால் சட்டம், ஒழுங்கை கையாள முடியாவிட்டால் பொறுப்பை எங்களிடம் விடுங்கள். நாங்கள் டில்லியை நாட்டிலேயே பாதுகாப்பான நகரமாக மாற்றிக் காட்டுகிறோம்” என்று அவர் கூறி உள்ளார்.