டெல்லி

பாஜகவினர் ஆம்  ஆத்மி கட்சியினரை தாக்குவதாக தேர்தல் ஆணையத்தில் கெஜ்ரிவால் புகார் அளித்துள்ளார்.

வரும் 5 ஆம் தேதி அன்று டெல்லி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.  டெல்லி சட்டாபைத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

டெல்லியில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவினாலும் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. எனவே இரு கட்சிகளும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால்  தேர்தல் ஆணையத்துக்கு.,

“டெல்லி சட்டமன்ற தொகுதிகளில் பா.ஜ.க.வினர் மற்றும் காவல் துறையினரால் எங்கள் (ஆம் ஆத்மி) கட்சித் தொண்டர்கள் மிரட்டப்படுவதையும் துன்புறுத்தப்படுவதையும் மிகுந்த கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நேற்று எங்கள் கட்சியின் மூத்த உறுப்பினர் சேத்தன் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டார். 2023-ல் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட அடிப்படையற்ற புகாருக்காக இப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் துறையினரின் நடவடிக்கையால் உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி காவல் துறையினர் ஆம் ஆத்மி தொண்டர்களைக் குறிவைத்து செயல்படுகின்றனர். ஆம் ஆத்மியின் பிரசாரத்தை தடுப்பதற்கும் இதில் தேர்தல் பணிகளில் தன்னார்வர்கள் பங்கேற்பதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. தேர்தலுக்கு முந்தைய இரவிலும், வாக்குப்பதிவு நாளன்றும் எங்கள் தொண்டர்களின் பணிகளை தடுக்கும் செயல்களில் காவல் துறையினர், பா.ஜ.க.வினர் ஈடுபடலாம் என்ற அச்சம் எழுகிறது. எங்கள் கட்சியின் தொண்டர்கள் மீதான தாக்குதல் நேரடியாக ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு சமம். தேர்தலில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்”

என்று கடிதம் எழுதியுள்ளார்.