டெல்லி

க்களவை தேர்தலையொட்டி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் 10 உத்தரவாதங்களை வெளியிட்டுள்ளார்.

நாடெங்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கடந்த ஏப்ரல் 19-ந்தேதி, 26-ந்தேதி மற்றும் மே 7-ந்தேதி என 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து மீதமுள்ள கட்டங்களுக்கான தேர்தலும் நடைபெற உள்ளது.

இன்று, டெல்லியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மக்களவை தேர்தலுக்கான 10 உத்தரவாதங்களை இன்று வெளியிட்டு உள்ளார்.  அவர் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், இந்த உத்தரவாதங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன என நான் உறுதிப்படுத்துவேன் என்றும் கூறியுள்ளார்.

கெஜ்ரிவால் அறிவித்த 10 உத்தரவாதங்கள் பின்வருமாறு

”முதல் உத்தரவாதம் ஆனது, நாட்டில் 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்படும். நாங்கள் அனைத்து ஏழைகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவோம்.

2-வது உத்தரவாதம், ஒவ்வொருவருக்கும் நல்ல மற்றும் சிறந்த இலவச கல்வியை ஏற்பாடு செய்வோம்.

3-வது உத்தரவாதம் ஆனது, சிறந்த சுகாதாரநலன். ஒவ்வொரு கிராமம் மற்றும் ஊரில் மொகல்லா கிளினிக்குகளை திறப்போம். நாட்டில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இலவச சிகிச்சை கிடைக்கும்.

4-வது உத்தரவாதம் தேசமே முதன்மையானது. நம்முடைய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்து உள்ளது. ஆனால் மத்திய அரசு இதனை மறுக்கிறது. சீனா ஆக்கிரமித்துள்ள அனைத்து நிலங்களும் விடுவிக்கப்படும்.

5-வது உத்தரவாதம் ஆனது அக்னிவீர் திட்டம் நிறுத்தப்படும். ஒப்பந்த நடைமுறை நீக்கப்பட்டு, ராணுவத்திற்கு போதிய நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்வோம்.

6-வது உத்தரவாதம் விவசாயிகளின் நலன். சுவாமிநாதன் அறிக்கையின்படி, பயிர்களுக்கு முறையான இழப்பீடு கிடைக்க வழிவகை செய்வோம்.

7-வது உத்தரவாதம் ஆனது, எங்களுடைய அரசு, டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கும். மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றுவோம்.

8-வது உத்தரவாதம் வேலைவாய்ப்பு பெருக்கம். ஆண்டுக்கு 2 கோடி புதிய வேலைவாய்ப்புகளை இந்தியா கூட்டணி அரசு உருவாக்கும்.

9-வது உத்தரவாதம் ஆனது, ஊழல் ஒழிப்பு. ஊழலை ஒழிப்பதற்கான உறுதியை எடுத்துள்ளோம். பா.ஜ.க.வின் சர்வதேச வர்த்தகத்திற்கான வரம்பை நீக்கி அனைவருக்கும் பொறுப்பு கிடைப்பது உறுதி செய்யப்படும்.

10-வது உத்தரவாதம் வர்த்தகம் மற்றும் தொழில் மேம்பாடு. பணமோசடி தடுப்பு சட்ட ஒழுங்குமுறைகளில் இருந்து ஜி.எஸ்.டி.யை நீக்கி அதனை எளிமைப்படுத்துவோம் என உறுதி அளித்துள்ளார். உற்பத்தி துறையில் சீனாவை முந்துவோம் என்ற இலக்கை அடைவோம் ”

என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.