துரை

லகின் பழமையான நாகரிகமான சிந்து சமவெளி நாகரீகம் தமிழகம் வரை நீண்டிருக்கலாம் என கீழடி ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

கிபி 5000 ஆண்டு முதல் கிமு 1500 ஆம் ஆண்டு வரை உலகின் தலைசிறந்த நாகரீகமாகச் சிந்து சமவெளி நாகரீகம் திகழ்ந்து வந்ததை பல வரலாற்று ஆய்வாளர்கள் அகழ்வாராய்ச்சி மூலம் உறுதி செய்துள்ளனர்.   அந்த நாகரிக காலத்தில் வாழ்ந்த மக்கள் நாட்டின் கிழக்கு, வடமேற்கு, மற்றும் தென் பகுதிகளிலும் சென்று வாழ்ந்துள்ளனர் என பல வரலாற்றுக் குறிப்புக்கள் கூறி வந்தன.

அது மட்டுமின்றி இவ்வாறு குடி பெயர்ந்த சிந்து சமவெளி நாகரிக கால மனிதர்கள்  ஒரே மொழியைப் பேசி வந்ததாகவும் வரலாற்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.  இவ்வாறு பேசி வந்த மொழி திராவிட மொழி எனப் பலரும் தெரிவித்து வருகின்றனர்.   திராவிட மொழிகளில் மிகவும்  மூத்த மொழி தமிழ் என்பது யாவரும் அறிந்த ஒன்றாகும்.   ஆனால் இந்த கருத்துக்களுக்கு ஆதாரம் கிடைக்காமல் இருந்து வந்தது.  குறிப்பாகத் தமிழகத்தைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் சிந்து சமவெளி நாகரிக காலத்தில் தமிழ் மொழி நாடெங்கும் பேசப்பட்டு வந்ததாகக் கூறி வந்தனர்.

ஆனால் இது குறித்த அகழாய்வு நடைபெறாமல் இருந்து வந்தது.   தமிழகத்தில் கடந்த 2013 வரை மூன்று இடங்களில் மட்டுமே அகழாய்வு நடந்துள்ளது.  அவை 1947 ஆம் வருடம் நடந்த அரிக்கமேடு அகழாய்வு, 1965 ஆம் ஆண்டு நடந்த காவிரிப்பூம்பட்டினம் மற்றும் 2005 ஆம் வருடம் நடந்த ஆதிச்சநல்லூர் அகழாய்வு ஆகியவை ஆகும்.   ஆனால் இந்த மூன்று ஆய்வுகளில் பண்டைய தமிழ் நாக்ரைகம் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

கடந்த 2015 ஆம் வருடம் மதுரையில் இருந்து 12 கிமீ தூரத்தில் வைகைக் கரையோரம் நடந்த கீழடி அகழாய்வு பண்டைய தமிழ் நாகரிகம் குறித்த தகவல்களில் பெரும் புரட்சியை உண்டாக்கியது எனவே கூறலாம்.    இந்த அகழாய்வில் சிந்து சமவெளி மற்றும் கங்கை நதி பள்ளத்தாக்கில் கிடைத்தது போன்ற பல பொருட்கள் கிடைத்துள்ளன.  இவை அனைத்தும் கிமு 200 ஆம் ஆண்டை சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டது.    இதே கால கட்டத்தில் தமிழ்ச்சங்கம் செயல்பட்டு வந்தது.

ஆனால் அரசியல் காரணங்களுக்காக இந்த அகழாய்வு நிறுத்தப்பட்டு அகழாய்வு தலைமை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார்.  இந்த பகுதியில் வேத காலத்துக்குச் சமமான நாகரீகம் நிலவி வந்ததை மறைக்க வட நாட்டினர் சதி செய்வதாகத் தமிழக அரசியல் தலைவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.   அதன்பிறகு மீண்டும் 2018 அம் ஆண்டு அகழாய்வு  தொடங்கப்பட்டு  ஆய்வு அறிக்கை அளிக்கப்பட உள்ளது.  இந்த ஆய்வின் மூலம் சிந்து சமவெளி நாகரீக மக்கள் தமிழகம் வரை வாழ்ந்திருந்ததற்குச் சான்று கள் கிடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி சிந்து சமவெளி மக்கள் தென் இந்தியா வரை பயணம் செய்துள்ளனர் எனவும்  இவர்கள் அனைவரும் ஒரே மொழியான மூத்த திராவிட மொழியைப் பேசி வந்ததாகவும் கூறப்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.    சிந்து சமவெளியில் நடந்த ஆய்வின் போது கிடைத்த கல்வெட்டுக்களில் பண்டைய கால தமிழ் மொழியை ஒத்த எழுத்துக்கள்  இருந்துள்ளது.   அதைப் போன்ற எழுத்துக்கள் இங்கும் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.  இந்த அகழ்வாராய்ச்சி மேலும் ஆழத்துக்கு நடந்தால் இது குறித்த பல உண்மைகள் தெரிய வரும் என அகழ்வாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.