சென்னை: கீழடி அகழாய்வு அறிக்கையை மத்தியஅரசு ஏற்க மறுத்து வரும் நிலையில், அது குறித்து நாடாளுமன்றத்தில்  விவாதிக்க திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்  வழங்கப்பட்டுஉள்ளது.

பரபரப்பான அரசியல் சூழலில்  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.  இன்று தொடங்கும் இந்த கூட்டத்தொடர் ஆகஸ்டு 21ந்தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 21 அமர்வுகள் நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில் மத்தியஅரசு 8 முக்கியமான பல மசோதாக்களை கொண்டு வர திட்டமிட்டு உள்ளது.

அதேவேளையில், எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை, உள்பட பல விவகாரங்கள் குறித்து விவாதிக்க முடிவு செய்துள்ளது.  மேலும்,  ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதை நிறுத்தியதற்கான உரிமை கோரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பு, பீகாரில் தேர்தல் ஆணையம் நடத்தி வரும் சிறப்பு வாக்காளர் திருத்தம் அதுதொடர்பாக மத்தியஅரசிடம் விளக்க கோரி வரிந்துகட்டிக்கொண்டிருக்கின்றன.

இதற்கு மத்தியில், திமுக எம்.பி.க்கள் சார்பில்,  கீழடி ஆய்வறிக்கையை வெளியிடுவதில் மத்திய அரசு தாமதம் காட்டுவது குறித்து அவையை ஒத்திவைத்து ஆலோசிக்க மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா நோட்டீஸ் வழங்கியுள்ளார். இந்த தீர்மானத்தை அவைத்தலைவர் விவாதத்துக்கு எடுப்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.