கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வராய்ச்சியின்போது, பெரிய, சிறிய பானைகள், பல வரிசைகள் கொண்ட செங்கல் கட்டிட சுவர்கள், விலங்கின எலும்பு கூடுகள், செங்கலால் ஆன தரைத்தளம், நெருப்பு பயன்பாட்டின் கட்டமைப்பு, எடைக்கற்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
கொந்தகையில் நடைபெற்ற அகழ்வராய்ச்சியில், முதுமக்கள் தாழிகள், சிறிய, பெரிய மனித எலும்புகள், மண்டை ஓடுகள், குழந்தையின் முழு உருவ எலும்பு கூடுகள், குவளை, சிறிய பானைகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மணலூரில் நடத்தப்பட்ட அகழ்வராய்ச்சியின்போது, சுடுமண் உலை, எலும்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அகரத்தில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் கடந்த 22-ந்தேதி 17 அடுக்குகள் கொண்ட உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உறை கிணற்றில் உள்ள அடுக்கு முக்கால் அடி உயரமும், 2½ அடி அகலமும் கொண்டதாக இருந்தது. இதையடுத்து தொடர்ந்து கூடுதலாக குழிகள் தோண்டி ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது.
அப்போது, மேலும் கூடுதலாக 4 அடுக்குகள் கொண்ட உறை இருப்பது தெரிய வந்ததது. இதையடுத்து, அந்த பகுதியில் மண்ணை அகற்றியபோது 21 அடுக்குகள் கொண்ட உறைகிணறு இருந்தது தெரிய வந்துள்ளது.
இந்த உறை கிணறுகள், பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இதுபோன்ற உறை கிணறுகளை அமைத்து இருப்பதாக ஆயவாளர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த பகதியில் மேலும் கூடுதலான உறைகள் கிடைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது.
6வது கட்ட அகழ்வாய்பு பணிகள் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள அரிய பொருட்கள், அந்த பகுதியில் மேலும் பல பழங்கால வாழ்க்கைளை முறைகள் தொடர்பான அரிய பொருட்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதனால், அகர்வாய்வுக்கான பணிக்காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
ஏற்கனேவே 5-ம் கட்ட அகழாய்வின்போது கீழடியில் 4 அடி உயர உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.