சென்னை:
கீழடி அகழாய்வில் கிடைத்த பழம்பொருட்களின் கண்காட்சி மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. 700 பொருட்களுடன் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
மதுரை அருகே சிவகங்கை மாவட்டத்திற்குள்பட்ட திருப்புவனம் தாலுகாவில் 2014ஆம் ஆண்டு முதல் கீழடி அகழாய்வு நடைபெற்றுவருகிறது. முதல் மூன்று கட்டத்தில் மத்திய தொல்லியல் துறையும் நான்கு, ஐந்தாம் கட்டத்தில் தமிழ்நாடு தொல்லியல் துறையும் அங்கே அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டனர். இதில், 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்லியல் சின்னங்கள் கண்டறியப்பட்டன. அவற்றுள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், சுதை சிற்பங்கள், சூது பவள மணிகள், விளையாட்டுப் பொருள்கள், உறைகிணறுகள், செங்கல் கட்டுமானங்கள், மிகச்சிறந்த நீர் நிர்வாகத்திற்கான வடிகால் அமைப்புகள் போன்றவை கிடைத்தன.
இங்கு கிடைத்த பொருள்களை எல்லாம் கீழடியிலேயே காட்சிப்படுத்தும் வண்ணம் கள அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு ரூ.10 கோடி ஒதுக்கியுள்ள நிலையில் அதற்காக ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இதற்கிடையே கீழடியில் கிடைத்த பொருள்களைக் கொண்டு தற்காலிக கண்காட்சியகம் அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்விடுத்திருந்தனர்.
இதனடிப்படையில் மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் அதற்குரிய பணிகள் நடைபெற்றுவந்தன. மதுரை உலக தமிழ்சங்க வளாகத்தின் முதலாவது தளத்தில் கீழடி ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் கண்காட்சி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கண்காட்சியை இன்று தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.