சென்னை: மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருங்கள் என்றும், மாணாக்கர்கள் கூட்டம் கூடக்கூடாது என்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் தொற்று பரவல் சற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி முகாம் மீண்டும் தொடங்கப்படும் என்றும் தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பெருமளவில் குறைந்து, பல்வேறு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் கொரோனா பரவல் ஏற்படுமோ என்கிற அச்சம் நிலவி வரும் நிலையில் முக்கிய அறிவிப்புகளை தமிழக மருத்துவக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், தமிழக மருத்துவக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், மருத்துவ கல்லூரி வளாகத்தில் பெரிய அளவில் மாணவர்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், அனைத்து சுகாதார பணியாளர்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இதனால் பதற்றம் தேவையில்லை, முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
[youtube-feed feed=1]