ஐதராபாத்:
தனது சொந்த கிராமத்தை சேர்ந்தவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.10 லட்சம் வழங்குவதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் இன்ப அதிர்ச்சி கொடுத்து உள்ளார்.
கடந்த ஆண்டு இறுதியில் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றதேர்தலில், மீண்டும் அமோக வெற்றிப்பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டவர் சந்திரசேகரராவ். இவர் தெலுங்கானா ராஷ்ட்டிய சமீதி கட்சித் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
ஆன்மீகத்தில் மிகுந்த நம்பிக்கையுடைய சந்திரசேகர ராவ் சமீபத்தில், தான் பிறந்த சொந்த கிராமமான, சித்திபேட் மாவட்டத்தில் உள்ள சின்டமடகா கிராமத்திற்கு சென்றார். அங்குள்ள மக்களிடம் எந்தவித பந்தாவுமின்றி சாதாரண மனிதர் போல ஒரு நாள் பொழுதை கழித்தார்.
அதைத்தொடர்ந்து, அந்த மாவட்ட மக்களுக்கென சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாமை அறிமுகம் செய்த அவர், உடல் நலக்கோளாறு ஏற்படும் நபர்களுக்கு அரசின் செலவின் சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறியவர், அந்த பகுதி மக்களுக்கு இன்ப அதிர்ச்சியையும் கொடுத்தார்.
தான் பிறந்த கிராம மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாக யோசித்து வந்ததாக கூறிய கேசிஆர், அங்கு வசிக்கும் 2000 குடும்பங்களுக்கும் தலா ரூ.10லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், இதன் மூலம், அந்த கிராம மக்கள் மிகப் பெரிய பலன் அடைய முடியும் என்றார்.
கேசிஆரின் இந்த அதிரடி அறிவிப்பு கிராம மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இது உண்மைதானா என்று கேள்வி எழுந்தது.
தொடர்ந்த பேசிய கேசிஆர், அரசு வழங்கும் ரூ.10 லட்சத்தைக் கொண்டு, பால் பண்ணை, கோழிப்பண்ணை, டிராக்டர் போன்ற விவசாய கருவிகள் வாங்கி, தங்களது வாழ்வை உயர்த்திக் கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தினார்.
ஆனால், இந்த ரூ.10 லட்சம் அந்த பகுதி மக்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுமா, வேறு ஏதேனும் வகையில் வழங்கப்படுமா என்பது குறித்தும் ஏதும் அறிவிக்கப்படவில்லை.