சென்னை

காங்கிரசையும் திமுகவையும் பிரிக்க முடியாதது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலர் கே சி வேணுகோபால் கூறி உள்ளார்.

நேற்று திமுக – காங்கிரஸ் தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தானது. அதன்பின்னர் அகில இந்தியக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது வேணுகோபால்,

”தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீண்டும் திமுகவுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணமாக உள்ளது. எங்களுக்குத் தமிழகத்தின் பெருமை தெரியும். ஆனால் ஒவ்வொரு நாளும் பிரதமர் மோடியும், மத்திய அரசும் தமிழகத்தின் பெருமைக்கு எதிராகச் செயல்படுகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைமை கூறியது போன்று, காங்கிரஸ் கட்சியானது தமிழகத்தில் 9 இடங்களிலும், புதுச்சேரியில் ஒரு இடத்திலும் என 10 இடங்களில் போட்டியிடும். மீதமுள்ள தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியானது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காகப் பாடுபடும்.

இம்முறையும் நாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.  இதனால் நாட்டில் ஒரு புதுமையான திட்டத்தை அமைப்பதுடன் புதிய மாதிரியான மாநிலமாகத் தமிழகம் அமையும். நாட்டு மக்களுக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான மத்திய அரசு கவிழும். காங்கிரசையும் திமுகவையும் பிரிக்க முடியாதது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது”

என்று தெரிவித்துள்ளார்.