அத்தியாயம்: 22

ஏகவதி

ல்லறவாசிகள் சுதர்சனன் வாயில் கொழுப்பு என்று  கண்களில் தெரியும் அப்பட்டமான பயத்துடன் பேசிக் கொள்கிறார்கள்.  ஆனால், அது அப்படியல்ல.

சதா இல்லறத்தின் பெருமையயைப் பாடி – புகழ்ந்து தள்ளி – நான் இல்லறத்தில் இருந்துக் கொண்டே எமனை வெல்வேன் என்கிறான்.  எமனை வெல்ல அவன் வைத்திருக்கும் ஆயுதம் விருந்தோம்பல்.  இதுபோதும்.

‘ஞானம் அறியவும் – முக்காலமும் உணர்ந்து எம பயத்தை வெல்லவும் துறவறமே வழி.  இல்லறம் வெறும் கட்டைச்சுவர்’ என்று எப்போதோ முடிவு கட்டிய தபஸிகளுக்கு சுதர்சனனால் தலைவலி.  துறவறத்தை காப்பாற்ற ஏதாவது செய்தாக வேண்டும்.

இல்லறத்தான் எம பயம் வென்றுவிட்டால் பிறகு துறவறத்தை எவன் மதிப்பான்?

உண்ணாமல் – உறங்காமல் – தவமிருந்து பெற்ற சித்தியை போகத்தாலே பெற்றுவிட முடிந்தால் துறவைச் சீந்துவார் யார்?

சுதர்சனன் – முனிபுங்கவர்களின் ஏகபோக எதிரியாகிவிட்டான்.  ஆகவே அவன் மனைவி ஏகவதியும் பகை.

எடுத்ததற்கெல்லாம் சாபமும், இஷ்டப்பட்டால் வரமும் தந்து துறவற தர்மத்தைக் கனபாடுபட்டுக் காப்பாற்றி வருகிற முனிகளின் கோபத்துக்கு ஆளான கலக்கம் சுதர்சனின் அடி வயிற்றில் இருக்கத்தான் செய்கிறது.

ஆனாலும் ஒரு அசட்டுத் துணிச்சல்.  முனிகள் சபித்தால் தந்தை அக்னி பகவான் பார்த்துக் கொண்டு சும்மாவா இருப்பார்? எரித்து விடமாட்டாரா?

இதே எண்ணம் முனிகளுக்கும் உண்டு.

அப்படியும், எமனுக்கு சுதர்சனனை இரையாக்கிவிடும் ரகசிய ஆலோசனை நடக்காமல் இல்லை.

முனிகளிடையே ஒரு ராஜ திட்டம் தீட்டப்பட்டு அது இன்று அரங்கேறப் போகிறது. சுதர்சனன் தொலைந்தான்.

மனைவி கணவனையும் கணவன் மனைவியையும் பூஜிக்கும் இல்லற தர்மம் வெல்வதில் தேவர்களுக்கும் இஷ்டக் குறைச்சல்தான். சதா தம்மையே போற்றும் துறவறத்தை வெல்ல வைக்க முனிகளுக்கு துணையாகத் தேவர்களும் களத்தில் குதித்தனர்.

அக்னி பகவான் மட்டும் விலகி இருந்தார்.  அவருக்கு சுதர்சனன் மேல் அபார நம்பிக்கை.  நிச்சயம் தேவர்களும் முனிவர்களும் சேர்ந்து விரிக்கும் வலையில் சிக்காமல் தப்புவான்.

சுதர்சனன் முக்காலமும் அறிந்த ஞானியா… தனக்கு முன்னால் நடக்கும் சதியை அறிந்துக் கொள்ள?  சாதாரண லௌகீகக் கட்டை.  அன்றைக்கும் வழக்கம் போல் தன் வாழ்க்கையைத் தொடங்குகிறான்.  அப்போதும், விருந்தினரை உபசரிப்பதில் ஒரு குறையும் வைத்து விடாதே என்று மனைவிக்கு மறக்காமல் சொல்கிறான்.

மனைவி – பத்தினி – பதிவிரதை – தலையாட்டுகிறாள்.  கணவன் திரும்பி வருவதற்குள் சமைக்க வேண்டிய ஏற்பாட்டில் இறங்குகிறாள்.  அவள்தான் சமைத்தாக வேண்டும்.  உதவிக்கு தாதியோ தோழியோ இல்லை.

தர்ம தேவதை – அந்தண விருந்தினனாக வடிவம் எடுத்து சுதர்சனன் வீட்டுக்கு நடந்தது.  சோதனை தொடங்கிவிட்டது.

தர்மத்தைக்காப்பாற்ற வேண்டி இந்த வேஷக்கட்டு.  அந்தணவேஷம் நன்றாகப் பொருந்தி இருப்பதாகவும் – ஏமாறப் போவது  மட்டுமல்லாமல் சுதர்சனனின் கொட்டம் அடங்கப்போகிறது என்றும் வாழ்த்தித்தான் அனுப்பினர் முனிவர்கள்.

தர்மதேவன் – அந்தணன் விருந்தினன் – நடக்கிறான்.  நடையில்தான் எத்தனை வேகம்.  பாதையில் கூர் தீட்டிய ஈட்டி போல் கிடக்கும் கற்களை சர்வ சாதாரணமாக மிதிக்கிறான்.  இவ்வளவுக்கும் பாதுகை அணியாத கால்கள்.  அவன் உருண்டு திரண்ட புஜபலம் – பெண்களை கிறங்கடிக்கத்தான் செய்யும்.

அவன் வேகத்தைக் கெடுப்பதற்குப் படைக்கப்பட்டதுபோல் பாதையை தடுத்துக் கிடக்கிறது.  ஒரு மரக்கிளை.  பன்னீர் மரத்தின் கிளை அது ஒரு கையால் அந்தப் பெரிய கிளையை ஒடித்து அனாயசமாக எறிகிறான்.  ஆளும் வடிவான தோற்றம்.  கண்களிலும் ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது.

இவன் தோற்றத்தை எவனாவது கவிஞன் இந்த பொழுது பார்த்தால் இவன் அழகுக்கு மயங்காதவள் பெண் இல்லை என்று பாடி – பெண் குலத்தை ‘பெருமையோ – சிறுமையோ’ படுத்தாமல் விடமாட்டான்.

பறவைகள் பாட்டு தவிர வேறு சத்தமில்லாத வனம்.  காதை கூர்மையாக்கினால் தூரத்தில் நதியோடும் சலசல சத்தம் கேட்கும் இப்போது சருகுகள் மிதிபடும்.  ஓசையும், அந்தணன்தான் – இதோ சுதர்சனன் வீட்டை நெருங்கி விட்டான்.  அவன் அடைந்த சந்தோஷம் – அடுக்கித் தீராது.

அந்தணன் வெளியே நின்று குடிலைக் கவனிக்கிறான்.  சுற்றிலும் பூ மரங்கள் – பூக்கள் .  இரண்டு அனுமாருக்குள் ஒரு பலாப்பழம் – பாடுகிறது.  ஏனோ சிரிக்கிறாள் அந்தணன்.  இன்னும் நாலே எட்டுதான் குடிலை அடைந்துவிடுவான். காட்டுப்பன்றி ஒன்று.  குறுக்கே ஓடுகிறது.  அது பெண்பன்றி.  வேகமாய் ஓடிவிட்டது.

மதியம் வந்து விடுகிறேன் என்று போன கணவனைக் காணவில்லை.  மதியம் என்பது அவர்களிடையே உச்சிப்பொழுது.  சாளரத்தின் வழியாக நுழைந்த சூரிய வெளிச்சம் மாலைப் பொழுதாகி விட்டதாகச் சொல்கிறது.

“கணவனே தெய்வம்.  அவன் வாக்கே மந்திரம்” என்று வாழ்வது தானே பத்தினிக்கு அழகு.  கணவன் சொன்னது பொய்யாகி விடக்கூடாது என்பதற்காக சூரியனைப் பொய்யனாக்குகிறாள் ஏகவதி.

இன்னும் உச்சிப் பொழுதாகவில்லை.  புத்தியை நம்ப வைக்கும் போராட்டமும், வயிறும் – பசியும் நடத்தும் போராட்டமும் அவளைக் களைப்படையச் செய்கின்றன.  கைக் கெட்டிய தூரத்தில் உணவிருக்கிறது.  கொண்டவன் பசியாறும் முன் கும்பி நிறைப்பது எவ்வளவு பெரிய பாபம்.

சமைத்து வைத்துவிட்டு – கணவனுக்காகக் காத்துக் கிடப்பதும், காலையில் போனவன் சூரியனெல்லாம் சென்ற பிறகு வந்து – நான் சாப்பிட்டுவிட்டேன் என்கிற போது வருகிற அழுகையோடு – அத்தனை பதார்த்தத்தையும் குருவி காக்கைக்கு கொட்டிவிட்டு யாரை நோவது என்று தெரியாமல் தன்னையே நொந்துக் கொள்வதும் –  இதெல்லாம் எதற்கு என்றுதான் ஏகவதிக்கு இன்னும் புரியவில்லை.

அரசன் ஏகவானுக்கு மகளாகப் பிறந்து – சுதர்சனனை திருமணம் செய்து – புண்ணியமென்று சொல்ல முடியாத – பாவத்திற்காக, குருஷேத்திரத்தில் ஆஸ்ரம வாழ்க்கை.  அரண்மனைச் சுகம் துறந்து, சுற்றம் இழந்து பத்துக்குப் பன்னிரண்டடி மூங்கில் குச்சிலில் வாழ்க்கை.  எதைப் புரட்ட?..

ஏதோ ஒன்று .. அவளை இயக்கிக் கொண்டுதான் இருக்கிறது.   பத்தினிப் பெண் வாசலில் வந்து நின்றால் குற்றம்.  வருகிற கணவனை வாசலுக்கு வந்து வரவேற்காவிட்டாலும் குற்றம்.  எந்தக் குற்றமும் விரும்பாத ஏகவதி ஆஸ்ரமத்துக்குள் இருந்தபடியே காதுகளை வெளியே வைத்திருக்கிறாள்.  கணவனின் காலடி ஓசை அவளுக்கு அடையாளம் தெரியும்.

அதோ – ஆஸ்ரமத்தை நோக்கி மனிதக் காலடி.  காதுகள் கூர்மையாகின்றன.  அன்னிய ஓசை.  வேகமாய் பரவுகிறது.  ஏகவதி யாரென்று குழம்புகிறாள்.  அதற்குள், ‘பெண்ணே’ என்கிற குரல்.  அவள் வெளியே வருவதற்கான அவசியத்தை ஏற்படுத்தி விடுகிறது.

ஆடையை திருத்தி மேல்ப்புற அழகை மறைத்துக் கொண்டே  தாமதிக்காமல் வந்து பார்க்கிறாள்.  அந்தணன் ஒருவன் ‘நான் விருந்தினராக வந்திருக்கிறேன்’ என்கிறான்.  இளமையும் அழகும் பெற்ற அவன் கண்கள் ஏகவதியின் விலாப் புறத்தை மேய்கிறது.

ஏகவதியின் உள்ளுணர்வு எச்சரிக்கை மணியடிக்கிறது . வயிற்றுக்குள் பயம் கூடு கட்டுகிறது.

துஷ்டன் , ஆனாலும் – விருந்தினன்.

கணவனிடம் மோக மயக்கத்தில் -ஏகவதி சொன்னதாய் சுதர்சனன் சொன்ன வார்த்தைகள் இப்போது நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

“நீங்கள் இல்லாதபோது விருந்தினர் வந்தாலும் உபசரித்து அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றி சந்தோஷப்படுத்துவேன்” என்றாளாம்.

ஏகவதிக்கு அப்படியொரு வாக்கு தந்ததாய் நினைவில்லை என்றாலும் பத்தினி பெண் புருஷன் பேச்சை சந்தேகிக்கலாமா?

விலாப்புரத்தை மேய்ந்த விருந்தினன் விழிகள் வேறு பிரதேசத்தில் மேய்ந்து கொண்டிருக்கிறது என்றாலும் உபசரிப்பது கடமை.

தண்ணீரால் அவன் பாதம் கழுவி அரை ஆசனம் தட்டிப் போட்டு விருந்தினனின் ஆசை என்னென்ன அறிந்து நிறைவேற்றக் கூனிக் குறுகி நிற்கிறாள்.

“அந்தணத்தகையே தாங்களுக்கு என்ன வேண்டும்?” பவ்யமாய் கேட்கிறாள்.

“எதைக் கேட்டாலும் தருகிறாயா?”

“இங்கு இருக்கிற எதை கேட்டாலும் தர வேண்டும் என்று என்பது கணவரின் விருப்பம்.”

‘அறிவேன் என்கிற பாவனையில் அந்த அந்தணன் கண்மூடி யோசிக்கிறான்.

பிறகு எதையோ நினைத்து ரசிப்பவன் போல் சிலிர்த்துக் கொள்கிறான்.  மூடிய கண்களை திறந்து அழகும் வனப்புமாய் அவன் எதிரில் நிற்கிற ஏகவதியைப் பார்த்து “நீ வேண்டும்” என்கிறான்.

(தொடரும்)