அத்தியாயம் -12 ருசி
அவன் யாரோ எவனே, ருசி அப்போதுதான் அவனை முதன் முறையாய் பார்க்கிறாள்.
பார்த்ததும் நெஞ்சுக்குள் ஒரு படபடப்பு. கண்களை வேறு பக்கம் நகர்த்த முடியாத இயலாமை. பூமியே அழகாகி விட்டது போல் ஒரு பிரமை. நதியில் நீராடிக் கொண்டி ருப்பதைப்போல ஒரு பேரின்பம்.
‘ருசி, நீ திருமணமானவள். நாடே போற்றும் முனிவனின் மனைவி. கணவன் கௌரவத்தைக் காப்பாற்றக் கடமைப்பட்டவள்.’ பெண்மை எச்சரிக்கிறது. அந்த எச்சரிப்பு காற்றில் கரைந்த வேட்டுச் சத்தமாய் விரைவாக காணாமல் போயிற்று.
ருசிக்கு அவனை கள்ளத்தனமாய் ரசிக்க வேண்டும் என்று ஆசையா? நிச்சயமாய் கிடையாது. மனைவியின் மேனியை தன் சுட்டு விரல் தூக்கத்தில் தீண்டினாலும் தவவலிமை குறைந்துவிடும் என்று நினைக்கும் கணவனுக்கு உண்மையாக நடக்கத்தான் இப்போதும் நினைக்கிறாள்.
மனசு ஆசைப்பட்டால் போதுமா? ஐம்புலன்களும் அடங்காமல் திமிறுகிறதே. யாகக் குதிரையாய் திமிறினாலும் ஏதாவது வழியில்தானே அடக்கிவிட முடியும். இந்தத் திமிறல் மோகக் குதிரையின் திமிறல். விஸ்வாமித்திரரே தோற்ற குதிரை. ருசியின் கடிவாளமா இழுத்துக் கட்டபோகிறது?
மான்களும், அன்னப் பறவையும் உலவிய அவள் மனக்காட்டுக்குள் இப்போது புதிதாக அவனும் குடியேறிவிட்டான்.
இவளாக குடி வைத்தாளா? அத்துமீறி அவன் நுழைந்தானா.. எப்படி இருந்தாலும் அவளுக்குள் பன்னீர் மழை பெய்வது உண்மை.
காய்ந்த நிலம் மழை விழுந்தால் வேண்டாம் என்றா மறுக்கும்?
வந்திருப்பவன் கண்களாலேயே பெண்களின் நாடியை கண்டு பிடித்து விடக் கூடிய இந்திரன். ருசியின் இந்தத் தனிமைக்காக பல ஆண்டுகளாய் காத்திருந்தவன்.
‘எங்கே தன்காத்திருப்பு இலவு காத்த கிளியின் நிலையாகிவிடுமோ’ என்ற சலிப்பு ஏற்பட்ட நிலை யில் அதிர்ஷ்டம் அடித்துவிட்டது. ருசியின் கணவன் தேவ சர்மன் யாகம் வளர்ப்பதற்காக அளகா புரிக்குப் போயிருக்கான். திரும்பிவர எப்படியும் பதினைந்து தினங்களாவது ஆகும்.
நாய் பெற்ற தேங்காயாய் தானும் அனுபவிக்காமல் பிறர்க்கும் அனுபவிக்கத் தராமல் கண்ணுக்குள் வைத்து மனைவியைக் காத்தவன். ஒரு கணம் மனைவியை தனிமையில் விட்டாலும் அவள் ஒழுக்கம் தவறி விடுவாள் என்ற அச்சத்தில் இரவுகளிலும்தூங்காமல் செத்தவன்.
அளகாபுரிக்குப் போயிருக்க மாட்டான். ஆசை வெறியின் அவசரத்தில் ‘யாகம் வளர்க்க வரு கிறேன்’ என்று வாக்குத் தந்து விட்டான். நூறு அஸ்வமேத யாகம் செய்தால் சதகிருது பதவி கிடைக்கும். அது இந்திரனுக்குச் சமமான பதவி. நாற்காலி ஆசையின் தடுமாற்றத்தில் ஒரு நிமிடம் மனைவி ருசியை மறந்து விட்டான்.
இப்போது அவன் அளகாபுரியில் இருக்கிறானே தவிர மனசு ருசியைத்தான் சுற்றிக் கொண்டி ருக்கிறது.
ருசியை அனுபவிக்க நல்ல சந்தர்ப்பத்திற்காக இந்திரன் காத்திருக்கிறான் என்பது தேவசர்மனக்கும் தெரியும். நிச்சயம் இந்திரனுக்குத் தான் ஆஸ்ரமத்தில் இல்லை என்பது தெரிந்திருக்கும். யாகம் நடத்தும் மன்னன் தேவர்களுக்கு அவிர்பாகம் அனுப்பியிருப்பான். அப்போது யாகம் நடத்துவது யார் என்று கேட்டிருப்பார்கள். சொல்லப்பட்டிருக்கும்.
காதல் விஷயத்தில் இந்திரன் காமனைவிட மோசமானவன். ருசியோ தேவசர்மனின் பாரா முகத்தால் முதிர்கன்னியின் தவத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். மனசுக்குள் தரையில் எறிந்த மீனாகப் புரண்டு கொண்டிருக்கிறாள்.
தூண்டிலோடு வரும் இந்திரன் மீன் பிடிக்காமல் போக வேண்டுமே! மந்திரம் சொல்வதையும் மறந்து தலையில் கை வைத்துக் கொண்டு இடிந்து போய் இருந்தான். தேவசர்மன்.
யாகசாலையில் இருந்த அரசன் முதலானவர்கள் முனிவர் உச்சந்தலை குடுமியை சரி செய்வதாய் நினைத்துக் கொண்டனர்.
பெருமூச்சு ஒன்றை வெளிப்படுத்திய தேவசர்மனின் ஒரே ஆறுதல் விபுலன் , தேவசர்மனின் சீடர்களில் முக்கியமானவன். அழகில் சுந்தரம். எந்தப் பெண்ணுமே விரும்பாத ரூபன். குரு மீது அபார மரியாதை வைத்திருப்பவன். ‘தீயில் இறங்கு’ என்றால் இறங்கிய பிறகும் ஏன் என்று கேட்காதவன்.
விபுலனை ருசிக்கு காவலுக்கு வைத்து விட்டுதான் வந்திருக்ககிறான். சொல்லவும் சொல்லி யிருக்கிறான். “உன் குருவின் பத்தினியைக் களவாட இந்திரன் வரலாம். நான் வரும்வரை உன் தாய்க்குச் சமமான என் தேவியை காப்பது உன் பொறுப்பு” என்று.
“தங்கள் சித்தம் குருவே” என்றானே. ஊழியம் செய்வதில் விபுலன் இன்னொரு லட்சுமணன். ராமர் காடாண்ட காலத்தில் தூங்காமல் காவல் காத்தான் லட்சுமணன். விபுலனும் தூங்கமாட்டான். ருசியின் நிழலாய்த் தொடருவான். ருசியைத் தேடி எவன் வந்தாலும் துரத்தி அடிப்பான்.
இப்போதுதான் தேவசர்மனுக்கு கொஞ்சம் நிம்மதி வந்தது. மந்திரத்தைப் பாதியிலிருந்து சொல்லத் தொடங்கினான்.
ருசி அங்கிருந்து போய்விட நினைக்கிறாள். கால்கள் ஒத்துழைக்க மறுக்கிறது. அவன் கண்கள் திருடும் காட்சிக்குத் தடை போட கைகளுக்குக் கட்டளை இடுகிறாள். கைகளும் ஒத்துழைக்க வில்லை.
இதழ்கள் அவளுடைய அனுமதி கேட்காமலேயே அவனைப் பார்த்து சிரித்து வைக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் மறைந்துவிடப் போகிற சூரியச் சிவப்பு அவள் கன்னத்தில் இருக்கிறது. ருசியின் கண்கள் அவனுக்கு வரவேற்புத் தோரணம் கட்டி விட்டது.
இந்திரனுக்கு இப்போது தைரியம் வந்துவிட்டது. தடுமாறிக் கொண்டிருக்கும் ருசியின் பெண்மையை வீழ்த்த – மெல்ல முன்னேறினான்.
“யார் நீ?” என்று கேட்க நினைக்கிறாள். ஆனால் வெளியே வந்த வார்த்தையோ “எங்கே?” என்கிறது.
“உன் ஆஸ்ரமத்துக்குத்தான்..”
“எதற்கு?”
“இருவருக்கும் தாகமாய் இருக்கிறதே.”
ருசியின் ஆஸ்ரமத்துக்கு இந்திரன் வழிகாட்ட, ருசி பின் தொடர்ந்தாள்.
“இங்கு எதற்காக வந்தீர்கள்?”
“நான் யாசகன். யாசகம் கேட்டு வந்திருக்கிறேன்.”
“யாசகமா? யாரிடம் கேட்கப் போகிறீர்கள்?”
“உன்னிடம் தான். ஏன் தரமாட்டாயா?”
“தங்கமும், வைரமும் உங்களைத்தான் அலங்கரிக்கிறது. முனிவன் மனைவி நான். என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
அதற்குள் ஆஸ்ரமம் வந்து விட்டிருந்தது. யாசிக்க வந்தவனை வரவேற்பது நம் பண்பாடு அல்லவா. முறைப்படி வரவேற்றாள். அமர இருக்கை தந்தாள்.
“நீயும் இப்படி உட்காரலாமே ருசி..”
“என் பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும்..”
“யாசகம் கூட தகுதியானவர்களிடம்தான் பெறுவேன். உன் நதிமூலமே எனக்குத் தெரியும்..”
“என்னத் தெரியம்.?”
“என்னை பிடித்திருக்கிறதா?”
‘என்ன கேள்வி இது? திடீரென்று இப்படிக் கேட்டு வைக்கிறார். பார்க்க அழகாக இருக்கிறார். மனசுக்கும் இதமாக இருக்கிறார். பிடிக்கவில்லை என்று எப்படி பொய் சொல்ல முடியும்? ஏன் தவிக்க வைக்கிறார்.
“பிடிக்கவில்லை என்று என்னால் பொய் சொல்ல முடியாது. ஆனால் உங்கள் எண்ணத்தை நிறைவேற்ற முடியாதவளாய் இருக்கிறேன். அடுத்த பிறவியில் யாருக்கும் மனைவியாகாமல் உங்களுக்ககாகக் காத்திருப்பேன்..”
நீராடச் சென்ற விபுலன் சோலையில் ருசியைக் காணாமல் பதறியடித்துக் கொண்டு ஆஸ்ரமத்துக்கு வந்தான்.
யாரோ ஒரு ஆண்மகனுடன் ருசி காதல் வயப்பட்டிருந்ததைக் கண்டான். குருநாதர்தான் எத்தனை பெரிய தீர்க்கதரிசி. இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று காது கொடுத்தான். ருசி சொன்ன கடைசி இரண்டு வார்த்தைகளும் காதில் விழுந்தது.
“உங்களுக்காகக் காத்திருப்பேன்.”
குரு சொன்னபடிதான் இருக்கிறது. பெண்களை நம்பவே கூடாது என்றார். வாய்ப்புக் கிடைத்தால் துரோகம் செய்ய அஞ்சாதவர்கள் என்றார். அது கண் எதிரில் நிஜமாகிக் கொண்டிருக்கிறதே.
இந்தத் தப்பை நடக்க விடப்போவதில்லை. என்று உறுதியெடுத்தன. சூக்கும ரூபத்தில் ருசியின் உடம்புக்குள் புகுந்தான்.
ருசியின் உணர்வு மயங்கி விட்டது. இப்போது ருசியின் உடம்புக்குள் விபுலன் வாழ்ந்து கொண்டிருந்தான். அவள் உதட்டோடு விபுலன் உதடும், அவள் கண்களோடு விபுலன் கண்ணும் அவள் கால்களோடு விபுலன் கால்களும் கச்சிதமாய் பொருந்தி இருந்தது.
“பசியில் துடிக்கிறேன் ருசி. ஒரேயொருமுறை உன்னைப் பரிமாறு..”
“கட்டையால் போடுவேன்..”
“இந்த குறும்பு பேச்சும் அபாரம் ருசி. இந்திர லோகத்தை ஆட்சி நடத்தி அலுத்துவிட்டேன். உனக்கு அரசனாய் இருப்பதையே கௌரவமாக நினைக்கிறேன். உன்னில் என்னை ஆளவிடு ருசி..”
“அற்பப் பதரே இந்திரா.. என்னிடம் சாபம் வாங்கிச் சாம்பலாவதற்கு முன் ஓடிவிடு..”
“ருசி என்ன ஆயிற்று உனக்கு? கண்களில் இருந்த காதல். எங்கே. போயிற்று? பூவாய் இருந்தவள் தேளாய் மாறியது ஏன்..?”
“அடேய் இந்திரா.. பேசுவது ருசி இல்லையடா. நான் விபுலன். முனிவரின் சீடன். நீ ருசியை களவாட வருவாய் என்று குரு சொன்னார். சூக்கும ரூபத்தில் தேவியின் உடம்புக்குள் நான்தான் இருக்கிறேன். ஓடுகிறாயா! இல்லை சபிக்கட்டுமா?”
“என்னை மன்னித்துவிடுங்கள் விபுலரே. யாசிக்கத்தான் இங்கு வந்தேன். எனக்குள் யாரோ என்னுள் புகுந்து ஏதேதோ பேசியிருக்க வேண்டும் அதற்கு நான் பொறுப்பில்லை. இதோ போய் விட்டேன். ” என்று காணாமல் போனான்.
விபுலன் ருசியின் உடம்புக்குள்ளிருந்து வெளியேற மனமின்றி சிற்றின்பம் எது, பேரின்பம் எது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.
ருசிக்கு ‘அடுத்த பிறவியில் உனக்காக காத்திருப்பேன்’ என்று சொன்னது வரைதான் தெரியும். அதன் பிறகு என்ன நடந்ததோ..
உணர்வு வந்து எழும்போது வந்தவன் இல்லை. அவன் எங்கே போயிருப்பான் என்று தேடவும் இல்லை. அவளுக்கு இப்போது எதுவும் தேவையாய் இருக்கவில்லை.
எரிந்து கொண்டிருந்த காமத்தீ சுத்தமாக அவிழ்ந்து போயிருந்தது.திருமணமான புதிதில் – தேவ சர்மன் வெறியோடு ஒரு நாள் ருசியை தனதாக்கிக் கொண்ட நாள் வலித்ததை விடவும் உடம்பு நூறு மடங்கு வலித்தது. ஆனால் சுகமான வலி!
ஆடை கலையவில்லை. உடம்பில் எங்கும் நகக்குறி இல்லை. அனால் புணர்ச்சிக்கான அயாசமும் சுகமும் மட்டும் இருக்கிறது. எப்படி என்றுதான் புரியவில்லை.
இப்படியொரு அதிசயம் இனி தினம் தினம் நடக்கட்டும் என்று நினைத்தாள்.
யாகம் முடிந்து விட்டது. அளகாபுரியிலிருந்து தேவசர்மன் திரும்பிவிட்டான். விபுலனைத் தேடினான். அவன் சந்தன மரத்தடியில் படுத்து ருசியோடு கூடிய சுகத்தை அசை போட்டுக் கொண்டிருந்தான்.
பெண் இன்பமே பேரின்பம். இறை பக்தி சிற்றின்பம் என்ற பேருண்மை புரிவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தந்த தேவசர்மனுக்கு முட்டாள் பட்டம் கட்டினான்.
“விபுலா?”
குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான். முகத்தில் திருடி மாட்டிக் கொண்டவனின் பாவனை. மிடறு விழுங்கினான்.
“வந்து விட்டீர்களா குருவே..! வணக்கம் குருவே..!” தடுமாறினாள்.
“என் தேவிக்கு எந்த பங்கமும் வரவில்லையே..?”
“இந்திரன் வந்தான். நான் தேவியாரின் உடம்புக்குள் சூக்கும ரூபமாய் புகுந்து அவனை விரட்டி அடித்துவிட்டேன். இல்லையென்றால் நீங்கள் நினைத்து பயந்தது நடந்திருக்கும்.”
“என் தேவியின் உடம்புக்குள் புகாமல் இந்திரனை விரட்டியிருக்க முடியாதா?”
“அது வந்து குருவே?!”
” உனக்கு குருகுல வாசம் போதும் விபுலா. செல்லலாம்..”
“நான் போய்விட்டால்.. இனி நீங்கள் யாகத்துக்குப் போனால் தேவியாருக்கு யார், காவலிருப்பார்கள் குருவே?”
விபுலன் முதல் முறையாக எதிரில் நின்று கேள்வி கேட்பதை குறித்துக் கொண்ட தேவசர்மன்சற்று காட்டமான குரலில், “இது குருவின் ஆணை” என்றான்.
விபுலன் எங்கு போவது என்று தெரியாமல் கானகத்துக்குள் சுற்றிக் கொண்டிருந்தான். பிரம்மச்சர்யமும் தொலைந்தது. தவப் பெருமையும் இழந்தாகிவிட்டது. ருசியும் பறிபோய்விட்டாள்.
இழந்த வலிமையை பெருக்க தவமிருந்தான். உடம்பு தவக்கோலத்தில் இருந்தது. மனசுக்குள் ருசியின் இதழ்ச் சுவையும், உடம்பின் மென்மையும், வயிற்றின் வாளிப்பும், மார்பின் திரட்சியும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தது.
நிம்மதியான உறக்கத்தில் இருந்தாள் ருசி. பாதங்கள் இரண்டும் ஈரமாகும் உணர்வு உறுத்தவே கண் விழித்தாள். யாரோ ருசியின் பாதங்களை கெட்டியாய் பிடித்திருந்தார்கள்.
தேவசர்மன்தான் ருசியின் மேனியை தீண்டவே மாட்டானே. அவர்தான் (இந்திரன்) வந்து சேட்டையில் ஈடுபடுகிறாரோ என்று பதறி காலை படக்கென இழுத்தாள். எழுந்து அமர்ந்தாள்.
“ஏன் தேவி, உன் கால்களை கண்ணீரால் கழுவும் பாக்கியம்கூட எனக்குக் கிடையாதா?” தேவசர்மன் கேட்டான். “தெய்வமே தாங்களா?”
“தெய்வம் நீதான் ருசி. நான் பாவி. உன் பாதங்களுக்கு பூஜை செய்தாவது மனிதனாக மாற முடியுமா என்று தவிக்கும் கேடு கெட்டவன். என்னைத் தடுக்காதே ருசி” என்றான்.
கால்களுக்காவது கணவன் மேனியை உறவாடும் பாக்கியம் கிடைக்கிறதே என்று ருசியும் சம்மதித்து விட்டாள்.
கடைசிவரை ருசி காரணம் கேட்கவே இல்லை. அவனும் சொல்லவில்லை.
எப்படிச் சொல்லுவான்?
‘உன் கற்புக்கு உனக்குத் தெரியாமேலே ஒருவனை காவல் வைத்தேன். அவனே உன் கற்பை களவாடிப் போய்விட்டான்’ என்று சொல்ல எந்தக் கணவனுக்குத்தான் மனசு வரும்?
பரிகாரம்தான் செய்யலாம். தேவசர்மன் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறான்.