அத்தியாயம்-11 ராதை
குருஷேத்ர வீதியெங்கும் குருதி ஓடுகிறது. பிணந்தின்னிக் கழுகுகள் ரத்தம் தோய்ந்த அலகை சூரியனில் காய வைத்திருக்கின்றன. கட்டுமரம்போல் பிணங்கள் மிதந்து செல்கின்றன. போர் நடந்து கொண்டிருக்கிறது. இன்று பதினேழாவது நாள் யுத்தம். கௌரவர்கள் சார்பாக இன்றும் கர்ணன்தான் படைநடத்திச் செல்கிறான். நேற்று கர்ணன் தலைமையில் கௌரவப் படை அபார வெற்றி பெற்றது.
இன்றும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இறுமாந்து இருக்கிறான் துரியோதனன். ராதை கண்ணனின் காலடியே கதியென கிடக்கிறான். ‘கண்ணா என் மகனைக் காப்பாற்று என்று இறைஞ்சிக் கொண்டிருக்கிறாள்.
நம்பினவரை கைவிடாதவனாயிற்றே கண்ணன். அதனால்தான் அர்ஜூனனுக்கு சாரதியாக கண்ணன் நிற்கிறான் என்று தெரிந்தும் கர்ணனைக் காப்பாற்றும் பொறுப்பைக் கண்ணன் காலடி யில் வைத்தாள்.
அதிகாலை கர்ணன் வீட்டுக்கு வந்திருந்தான். ராதையின் காலடி தொழுது, “போகிறேன் தாயே..” என்றான்.
“வருகிறேன் என்று சொல் ராதையா..”என்றாள்.
“அம்மா இன்னொருமுறை ராதையா என்று அழை!”
“ஏன் ராதையா?”
“போகிறேன் தாயே, நீயே எனக்கு அம்மா, நீயே அம்மா!” என்றான்.
“ஏன் இப்படிப் பேசுகிறாய் மகனே?”
“மாலையே இதற்கு பதில் கிடைக்கும்” என்றான். மாலை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
கர்ணனுக்கு கற்ற வித்தையெல்லாம் மறந்து போயிற்று. மண்ணில் புதைந்த தேர் சக்கரத்தை நேர்படுத்த என்ன செய்யவேண்டும்? தேர்ப்பாகன் இல்லாமலே குதிரை செலுத்த எந்த சமிக்ஞை தரவேண்டும்?” எதுவும் ஞாபகத்திலில்லை. எல்லாம் மறந்து போயிற்று.
வித்தை கற்றுத் தந்த பார்க்கவரிஷியின் சாபம் பலித்துவிட்டது. ‘அடே!சத்ரியனே! பிராமணன் என்று பொய் சொல்லி வித்தை கற்றவனே. என்னிடமிருந்து கற்ற வித்தை எதுவும் தக்க சமயத்தில் பயன்படாது போகும்’ என்றாரே. பிரம்மாஸ்திரமும், பார்க்கவாஸ்திரமும் அம்பறாத் துணியிலிருந்து என்ன பெருமை? பயனில்லையே.
தேரோட்டி சல்லியனும் கோபித்துக் கொண்டுவிட்டான். ‘கர்ணா உனக்கு நான் தேரோட்ட முடியாது’ என்று தேரைவிட்டு இறங்கிப் போய்விட்டான். ஆரம்பத்திலிருந்தே கர்ணனுக்கும், சல்லியனுக்கும் ஆகவில்லை. கேவலம் கர்ணன் ஒரு தேரோட்டி! அவனுக்கு மந்திர தேசத்து அரசன் நாம் தேரோட்டுவதா என்ற எண்ணம்தான் காரணம்.
‘தேரோட்டியே தேரை இன்னும் வேகமாய் செலுத்து’, ‘தேரோட்டியே வலப்புறமாக தேரை செலுத்து’ என்று கர்ணன் கட்டளை இடும்போது சல்லியனுக்கு நெருப்பில் விழுந்த உணர்வு ஏற்பட்டது. துரியோதனன் முகத்துக்காக பொறுத்துக் கொண்டான்.
போர்க்களத்தில் அன்றைய கதாநாயகர்களான கர்ணனும், அர்ஜூனனும் இதோ நேருக்கு நேர் மோதுகின்றனர். இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. இருவரில் ஒருவர் உயிர் எமனுக்கு என்று போர்க்களத்திலுள்ள அத்தனை வீரர்களும் அறிந்து வைத்திருந்தனர் இருபெரும் வீரர்களும் போரிடும் அழகை போர்க்களமே போரிட மறந்து ரசித்தது.
இந்தப் போரிலே அர்ஜூனன் வெறும் ஆடிப்பாவை, தேரோட்டி கர்ணன் கட்டளை இடுகிறான். அர்ஜூனன் ஆடுகிறான்.
அர்ஜூனன் போரிடும் லட்சணத்தைப் பார்த்த கர்ணன் சிரித்துக் கொண்டான். அர்ஜூனனுக்குத் தன் எதிரில் நின்று போரிடும் கர்ணன் தாய் குந்தியின் ‘தலைச்சான்’ என்பது தெரியாது. ஆனால் கர்ணனுக்குத் தெரியும். சுத்தமான வீரன் கர்ணனை சகோதர பாசம் தண்ணீரில் மிதக்கும் தாமரைக் கொடிபோல் தள்ளாடச் செய்யாமலில்லை.
பாசத்துக்கு முதலிடம் கொடுக்க முடியாது. கர்ணன் கடன் பட்டிருக்கிறான். அதை தீர்க்க இதை விட அரிய சந்தர்ப்பம் வாய்க்காது. ‘தேரோட்டி மகனே போ வெளியே’ என்று கிருபரும், துரோண னும் கூட்டாய் முழங்கும்போது, ‘கர்ணனை அங்க தேசத்துக்கு அரசனாக்குகிறேன். அவன் தன் திறமையை நிரூபிக்கட்டும்’ என்றானே. அரசனாக்கினானே. கேட்டவர்க்கு இல்லை என்று சொல்லாமல் தரும் கர்ணனுக்கக் கேட்காமல் தந்தவன் துரியோதனன் அல்லவா! அவனுக்கு நன்றிக் கடன் செய்ய வேண்டும்.
‘ஓடினால் விட்டு விடுவேனா! விளையாட்டில் தோற்றேன் என்று ஒத்துக் கொள். போக விடு கிறேன்’ என்று பானுமதியின் புடவையை பற்றி இழுத்தபோது ‘அறுந்த முத்துமாலையை எடுத்து கோர்க்கிறேன். நீங்கள் விளையாட்டைத் தொடருங்கள்” என்றானே துரியோதனன்.. அந்தப் பெருந்தன்மைக்கு பெருமை செய்ய வேண்டும்.
அர்ஜூனனைக் கொல்ல வேண்டும். இல்லையேல் துரியோதனனுக்காக உயிர்விட வேண்டும். இப்போது துரியோதனனுக்குத் தர உயிர் மட்டும்தான் இருக்கிறது. வீரமும் இல்லை என்றாகி விட்டது. நாகாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்த முடியாது. தாய் குந்திக்கு வாக்கு கொடுத்துவிட்டான்.
ஒரு முறை பயன்படுத்தியும் விட்டான். குறி தப்பிவிட்டது. எல்லாம் கண்ணன் பண்ணிய லீலை. தான் ஓட்டிய தேரை மண்ணுக்குள் ஓரடி புதைத்துவிட்டான். இதற்கு பூமாதேவியும் உடந்தை. கர்ணன் அர்ஜூனனின் கழுத்துக்கு வைத்த குறி கிரீடத்தை தட்டிவிட்டு செயலிழந்து விட்டது.
சல்லியன் சொன்னபடி கேட்டிருக்கலாமோ என்று இப்போது வருத்தப்பட்டான். ‘கர்ணா, நாகாஸ் திரத்தை நெஞ்சுக்கு குறிவை’ என்றான் சல்லியன். கர்ணன் கழுத்துக்கு குறி வைத்தான். நெஞ்சுக்கு குறி வைத்திருந்தால் கழுத்துக்கு போயிருக்கும்.. இதைக் காரணம் காட்டித்தான் சல்லியன் இறங்கி போய்விட்டான்.
மண்ணில் புதைந்த தேர்ச் சக்கரத்தை சரிபண்ண வேண்டும். அந்தணன் ஒருவன் கொடுத்த சாபம். ‘கர்ணா நான் வளர்த்த கன்றை தேர்ச்சக்கரத்தால் கொன்றிருக்கிறாய். அந்த தேர்ச்சக்கரம் மண்ணில் புதையும். உன் உயிரையும் வாங்கும்’ என்ற சாபம் சமயம் பார்த்து பலிக்கிறது.
இந்திரன் கவச குண்டலங்களைத் தானமாக வாங்கிவிட்டு தந்த ‘சக்திவேல்’ இருந்தால் பயன்பட்டிருக்கும். அதனால் அர்ஜூனனை வீழ்த்தியிருப்பான். அதை ஒரு முறைதான் பயன்படுத்த லாம் என்று சொல்லி தந்தான் இந்திரன். அதை கடோத்கஜன்மேல் பிரயோகித்து விட்டான்.
தேரிலிருந்து கீழே குதித்தான் கர்ணன். மண்ணில் புதைந்த சக்கரத்தை தோள்கொடுத்து தூக்கினான்.
“அர்ஜூனா , கர்ணன் மார்பை குறி வைத்து சரமாரியாக அம்பை செலுத்து, அடை மழைபோல் அம்புமழை பெய்யட்டும்!” கிருஷ்ணன் கட்டளை பிறப்பித்தான்!
“ஆயுதமின்றி நிற்பவனை தாக்குவது போர் தர்மமா கண்ணா?”
“வீட்டுக்கு விளக்காக இருந்தவளை சபைக்கு இழுத்து வந்து துகில் உரித்தார்களே அது தர்மமா? அன்று நான் மட்டும் சேலை தர வில்லை என்றால் என்ன நடந்திருக்கும்? உன் காதல் திரௌபதி உடம்பை நாடே ரசித்தி ருக்கும். அர்ஜூனா! காடீபத்தைப் பேசவிடு..”
முதல் குறியை கர்ணனின் வில் விஜயத் துக்கு தைத்தான். அடுத்து மார்பிலே அம்பு களை தொடர்நது செலுத்தினான். இந்தக் காட்சியை வானத்திலிருந்து கண் கலங்க பார்த்துக் கொண்டிருந்தார் சூரிய பகவான்.
பிறக்கும்போதே நெஞ்சோடு இருந்த கவசத்தை அறுத்து இந்திரனுக்குத் தந்திருக்காவிட்டால் எந்த அம்பும் கர்ணன் நெஞ்சைத் துளைக்க முடியாது. கர்ணனின் சரித்திரத்தில் சாவு இல்லாமல் போயிருக்கும்.
இந்திரனும் , கண்ணனும் கவச குண்டலத்தை வாங்கிவிட சதி செய்வதை அறிந்ததும் சூரிய பகவான் கர்ணன் கனவில் சென்று சொன்னார். கவச குண்டலத்தை யாருக்கம் தந்துவிடாதே என்று. தந்தை சொல்லைவிட தானத்தைப் பெரிதாக மதித்தான் கர்ணன். செய் தானம் இதோ உயிர் வாங்கிக் கொண்டிருக்கிறது.
பெரிய தலைகள் வீழ்த்தப்பட்டால் போரை அச்சமயம் கைவிடுவது மரபு. கர்ணன் வீழ்ந்ததும் போர் கைவிடப்பட்டது. அர்ஜூனன் தான் செய்த கோழைத்தனத்துக்காக குறுகிப் போய் நிற்கிறான். கண்ணன் முகம் தீவிர சிந்தனையில் ஆழ்ந்து கிடக்கிறது.
கர்ணன் வீழ்ந்த செய்தி கேட்டு துயரமே உருவாக துரியோதனன் வருகிறான். கர்ணனின் மனைவி சுபரங்கி வருகிறாள். ‘என் மகன் வீழ்ந்தான்’ என்று உரக்கப் புலம்பிக் கொண்டே குந்தியும் வருகி றாள். வீரர்கள் கூட்டமே ஸ்தம்பித்து நிற்கிறது.
‘தாயே குந்தி, வீழ்ந்தது கர்ணன், உங்கள் மகனில்லை’ என்று ஒரு வீரன் சொல்கிறான். கர்ணன் , சூரியனுக்கும் குந்திக்கும் பிறந்த பிள்ளை என்பது இன்னும் இரகசியமாகத்தான் இருக்கிறது. அலறியடித்துக் கொண்டு வந்த குந்தி, கர்ணனை தன் மடியில் போட்டு ‘மகனே மகனே’ என்று அரற்றுகிறாள்.
‘இந்தப் பாவியை மன்னிப்பாயல்லவா’ என்று கேட்கிறாள்.
கர்ணன் பதில் சொல்லவில்லை. குந்தியின் மடி அவனுக்குச் சுட்டது. அவனுக்கு ராதையின் மடி வேண்டும். அந்த மடியின் சுகத்தில் மரண வேதனையை மறக்க முடியும். எந்த வேதனையும் மறக்கடிக்கும் சக்தி ராதையின் மடிக்கு உண்டு.
“ராதை, தாயே எங்கே இருக்கிறாய்” மகனே என்ற வார்த்தையை என் காதுகள் தேடுகின்றன. கேட்ப வர்களுக்கு அள்ளி கொடுக்கும் பிள்ளையைப் பெற்றிருந்தும் தனக்கென எதையும் கேட்காதவளே. அம்மா..” என்று மறுகுகிறான்.
கர்ணனை ரகசியமாய் சந்தித்து, அர்ஜூனன் மேல் ஒரு தடவைக்கு மேல் நாக அஸ்திரத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று வரம் வாங்கிவிட்டு இப்போது நீலிக் கண்ணீர் வடிக்கிறாள் குந்தி.
புருஷன் அரசனாக இருந்தாலும் பிறப்பால் தேரோட்டி என்ப தால் இதுவரை மதிக்காத மனைவி சுபாங்கி அவன் காலடி யைப் பற்றிக் கொண்டு கதறுகிறாள். ‘கலிங்க மன்னன் மகள் என்ற கர்வம் தகர்ந்தது சுவாமி. என்னை மன்னித்தேன் என்று சொல்லுங்கள்..’ என்று கதறுகிறாள். அவள் கண்ணீர் கர்ணனின் பாதங்களை கழுவிக் கொண்டிருக்கிறது.
“அம்மா” என்கிறான் கர்ணன்.
“சொல் மகனே”
“எனக்கு என் அம்மா வேண்டும்”
“அதுதான் வந்துவிட்டேனே மகனே, ஆற்றிலே உன்னைவிட்ட பாவி ஆற்றாமையால் அழுவதைப் பார்..”
“நான் என் தாயைக் கேட்கிறேன். பாண்டவர்களின் தாயையல்ல..”
கண்ணனுக்கு விஷயம் விளங்கிவிட்டது. கர்ணன் ராதையை தேடுகிறான். தேரோட்டியின் மனைவியைத் தேடுகிறான். கூடாது. “கர்ணா, உனக்கு புத்தி பேதலித்து விட்டதா? ஆதித்தன் மகனே, இதோ உன்னைப் பெற்ற வள் குந்தி. அவள் மடியில்தான் உன் தலை இருக்கிறது.. நீ மன்னன் மகன் . தேரோட்டி பிள்ளை இல்லை.”
“ஆமாம் கர்ணா!”
கண்ணன் என்ன சொல்ல வருகிறான் என்று கர்ணனுக்கு புரிந்தது. தாய் ராதை பார்க்க வந்தாலும் தடுத்து விடுவார்கள் என்பதும் தெளிவாகத் தெரிந்தது.
தேரோட்டி மகனே என்றவர்கள் இன்று எங்கள் தெய்வமே என்கிறார்கள். வில்லெடுக்கும்போது ஏகடியம் பேசியவர்கள் தர்மனைப் பார்ப்பதைவிட மரியாதையாகப் பார்க்கிறார்கள்.
முண்டியடித்த கூட்டம் அடித்து விலக்கப்பட்டது. காவலர்கள் குடிமக்களை ‘ம்..தள்ளிப் போ தள்ளிப்போ, ‘என்று பிடித்துத் தள்ளினார்கள். மறுத்தால் அடித்து ஓட்டினார்கள்.
எவ்வளவுதான் அடித்தாலும், கர்ணனைப் பார்த்தே தீருவது என்று அடம் பிடித்துக் கொண்டி ருந்தாள் ராதை. கர்ணனின் வளர்ப்புத் தாய். மகனைப் பார்க்க வேண்டும் என்ற பாக்கியமும் மறுக்கப்பட்டுவிட்டவள். கூட்டத்தை விலக்கிவிட்டு முன்னேறவும் உடம்பில் திறனில்லை. ஏற்கெனவே மெலிந்த தேகம். போர் தொடங்கிய தினத்திலிருந்து உண்ணா நோன்பு காத்து வருகிறாள். தண்ணீர் மட்டும்தான் ஆகாரம்.
இந்தக் குருஷேத்ரப் போரிலே கர்ணன் வெற்றி சூடவேண்டும் என்று விரதம் இருக்கிறாள். விரதம் பொய்த்துவிட்டது. கண்ணனை நம்பினாள். கண்ணன் ஏமாற்றிவிட்டான்.
‘மகனே’ என்று கூக்குரலிட்டு அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள் குந்தி. ராதை ‘மகனே’ என்று வாய் விட்டு கதற முடியாமல் மனசுக்குள் அழுது கொண்டிருக்கிறாள். வலியில் துடித்துக் கொண்டிருக்கிறாள்.
கர்ணனின் ஒவ்வொரு வெற்றியின் போதும், ‘ராதை உன் மகன் ஜெயித்துவிட்டான் என்று சொன்ன வர்கள் இப்போது கர்ணன் குந்தி மகன் என்கிறார்கள். இதை ராதையே கேட்க நேர்ந்தது துர்பாக்கியம்.
மகனின் மரணம் கொடுமையானதா.. தாய் என்ற பதவியை இழந்துவிட்ட கொடுமை கொடுமை யானதா என்று அந்தத் தாயால் தெளிவுப்படுத்த முடியவில்லை. அம்மா என்று வாய் நிறைய அழைத்த பிள்ளையை மகனே என்று சொல்ல முடியவில்லை.
தரையில் கிடந்து புரண்டு துடிக்கிறான் கர்ணன். அவனை மடியில் கிடத்தி, ‘ கர்ணா இந்த வலி தற்காலிகம்தான். நீ செய்த தர்மம் உன்னைக் காப்பாற்றும்’ என்று ஆறுதல் சொல்ல முடிய விலலை. கண்ணன், குந்தி, சுபாங்கி என்று சுற்றிலும் பாவிகள், பாவகளின் கூட்டுத்துக்குள் மகன் அகப்பட்டுவிட்டான்.
தாயென்று சொந்தம் கொண்டாட வந்திருப்பவள், பெற்றதும் ஆற்றில் விட்டவள். காலடியில் கிடந்து அழுபவள் மனைவி என்ற பெயரில் வாய்த்த பிசாசு.
“வீரம் வாய்த்தது. கொடை உள்ளம் வாய்த்தது. அள்ளிக் கொடுக்க செல்வம் கிடைத்தது. அன்பான மனைவி மட்டும் கிடைக்கவில்லை. அம்மா” என்று ராதையிடம் அடிக்கடி புலம்புவான் கர்ணன்.
அப்போதெல்லாம் ராதை சொல்கிற ஆறுதல் ஒன்றுதான். “எல்லாம் கண்ணன் பார்த்துக் கொள்வான் கர்ணா. அவன் அவதார புருஷன். என் மருமகளுக்கு நல்ல புத்தி தரச் சொல்லி கண்ணனை கேட்கிறேன்” என்பாள். அந்தக் கண்ணனே இன்று எமனாகி நிற்கிறான். பாண்டவர்களை வெல்ல வைப்பதற்காக அநியாயத்தை கையில் வைத்துக் கொண்டு நிற்கிறான்.
“ஐயோ மகனே!” என்று புலம்புகிறாள். சத்தம் போட்டு அழவும் திராணியற்ற அவள் நிற்கவும் முடியாமல் சோர்ந்து உட்கார்ந்துவிட்டாள்.
அவள் காதுக்குள் கர்ணனின் கணீர் சிரிப்பு கேட்கிறது. கணவர் அதிரதனும், மகன் கர்ணனும் சேர்ந்து ராதையை படுத்துகிறபாடு ஞாபகம் வருகிறது.
“ராதை” அதிரதன் கூப்பிடுவதுபோல் குரல் மாற்றிக் கூப்பிடுவான் கர்ணன். ராதையும் கணவர்தான் வந்து விட்டார் என்று பதறியடித்து வருவாள். வெளியே கால்மேல் கால் போட்டபடி கம்பீரமாய் அமர்ந்திருப்பான் கர்ணன்.
ராதை ஏமாந்து நிற்பாள். கர்ணன் கைகொட்டி சிரிப்பான். அதிரதனும் உடன் சேர்ந்து கொள்வான்.
“தகப்பனும் மகனும் சேர்ந்து என்னையா ஏமாற்றினீர்கள். இன்று உங்களைப் பட்டினி போடு கிறேன்” என்பாள் ராதை.
கர்ணன் கையிலுள்ள வில்லால் உறியில் இருக்கும் உணவைத் தன் எதிரில் கொண்டு வருவான். ராதை மகனின் வில்வித்தையின் பெருமையில் கர்வப்பட்டு நிற்பாள். கண்ணி லிருந்து ஆனந்தக் கண்ணீர் உதிரும்.
இப்போது வடிப்பதற்குக் கண்ணீரும் வற்றிவிட்ட நிலையில் புலம்பிக் கொண்டிருந்தாள் ராதை.
தாய் தந்தை யரென்று அறியாதவனாய் இருந் தாயே. இன்று உனக்குத் தாய் தெரியும். தந்தை தெரியும். மன்னன் மகனென்பதால் மனைவியும் இனி கெஞ்சுவாள். மகனே கர்ணா.. நீ செய்த தர்மம் உன்னைக் காப்பாற்றும்..’
போர்க்களத்திலிருந்து அரண்மனைக்க கர்ணனை அரச மரியாதையோடு கொண்டு செல்ல ஏற்பாடு தயாராகி விட்டது. சுற்றங்கள் எல்லாம் தன்னைச் சுற்றி இருக்க, கர்ணனின் கண்கள் யாரையோ தேடிக்கொண்டிருக்கிறது. அவன் ராதையை தந்தை அதிரதனைத்தான் தேடுகிறான் என்பதை யூகிக்க கர்ணனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.
இன்னும் உயிருடன் விட்டு வைத்தால் கர்ணன் தேரோட்டிகளுக்கு அரச மரியாதை செய்யச் சொல்வான். அதிரதனுக்கு முதல் மரியாதை செய்யப் பணிப்பான். ராதையை அம்மா என்பான். குந்திக்கு இணையான இடம் கேட்பான். அப்படியொரு நிலை ஏற்பட விடக் கூடாது. விரைந்து நடந்தான் கண்ணன். கர்ணன் அருகில் சென்றான்.
“கர்ணா” என்றான் அன்பொழுக…
“நீ எதற்கு வந்திருக்கிறாய் என்று தெரியும் கண்ணா. கேள்..”
“நீயோ சாகப்போகிறாய். நீ செய்த தர்மம் எல்லாம் திரண்டு புண்ணியமாகி உன்னிடம் இருக்கிறது. உனக்கு அது எதற்கு? எனக்குத் தந்துவிடேன்.”
அதையும் தாரை வார்த்தான் கர்ணன்.
புண்ணியத்தை வாங்கிக் கொண்டு கண்ணன் நடந்தான். இதுவரை தர்மத்துக்குக் கட்டுப்பட்டு இருந்த கர்ணனின் உயிர் கண்ணனை பின் தொடர்ந்துச் சென்றது.
மாயவன், மதுசூதனன் என்று ராதை வாயாலேயே பூஜிக்கப் பட்ட கண்ணனின் சதியால் கர்ணன் உயிர் பிரிந்தது. ராதை மூர்ச்சையாகி நினைவு தப்பிய நேரம் ராதையின் என்ற நினைப்புதான் இருந்தது ‘கண்ணன் பாவி!”
கிழவன் அதிரதன் மனைவியைக் காணாமல் தள்ளாடித் தள்ளாடி வந்தான். மகனை இழந்த துக்கம் ஒரு புறமும் மனைவியைக் காணவில்லை என்ற கவலை மறுபுறமும் சுமையாய் அழுத்த மெல்ல நடந்து வந்தான்.
‘ராதை ராதை’ என்று அழைத்துக் கொண்டே போர்க்களத்தில் நடந்தான். காலடியில் குருதிச் சேறு கசகசத்தது. இதில் மகன் கர்ணனின் குருதியும் அல்லவா கலந்திருக்கிறது. கண்ணீர் பெருக அங்கேயே அமர்ந்தான் அதிரதன். அவனுக்கு மட்டும் சக்தியிருந்தால் முதலில் சூரியனைச் சுட்டெ ரிப்பான். பிறகு குந்தியைக் கொன்றுவிட்டு , ‘ என் மகன் கர்ணன், அவன் தாய் ராதை’ என்று கூச்சலிடுவான்.
‘மகனே கர்ணா’ என்று நைந்த குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறான் அதிரதன். ராதைதான் குருதி யில் கிடந்து அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள்.
வேகமாய் சென்று, ‘ராதை’ என்கிறான் அதிரதன்.
“என் மகனை.. ராதையனைப் பார்க்க வேண்டும்!” என்று புலம்புகிறாள்.
“அது முடியாது ராதை. நாம் தேரோட்டிகள். கர்ணன் அரச வம்சம். அரசனைக் காண, தொட அரசன் அனுமதித்தாலொழிய அடிமைகளுக்கு உரிமையில்லை ராதை..
“கர்ணன் நான் சீராட்டி வளர்த்த பிள்ளை. என் மகன். மகனைச் சீராட்ட தாய்க்குத் தடை போடு வார்களா? தர்மன் இருக்கிறான். சகாதேவன் இருக்கிறான். இவர்கள் இருவரும் நியாயம் தெரிந்த வர்கள். என் தாய்மையை நிச்சயம் மதிப்பார்கள். என்னை அழைத்துச் செல்லுங்கள்.”
ராதையின் பிடிவாதம் அதிரதன் அறியாததல்ல. அதே நேரம் அரண்மனை சாரதியாய் இருந்தவன். அரண்மனைத் திட்டங்கள் அறிந்தவன் என்றாலும் மனைவிக்காக அழைத்துச் சென்றான். அவள் ஆசை நிறைவேறினால் தனக்கும் மகன் முகத்தைப் பார்க்கும் பாக்கியம் கிடைக்குமே!
ஆனால், இருவரையும் அரண்மனைக்குள் விடவே இல்லை. காத்திருந்து பார்த்துவிட்டு தளர்ந்து நடந்தனர். வீதியெங்கும் ‘கர்ணன் குந்தியின் மகன், சூரிய பகவானுக்கு பிறந்தவன்’ என்று பேசினார்கள்.
‘இதை கேட்கவா இன்னும் உயிரோடு இருக்கிறோம்’ என்று கணவனும் மனைவியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
கேட்கும் சக்தியை காதுகள் இன்னும் இழக்காமல் இருந்தது எத்தனை பெரிய சாபம்!
“எப்படியும் சுடுகாட்டுக்கு வந்துதானே ஆகவேண்டும். அங்கு பார்த்துக்கொள்ளலாம்’ என்று இரு வரும் சுடுகாட்டுக்கு நடந்தார்கள். சுடுகாடு சென்று சேரும்போது கர்ணனின் உடல் சிதையில் எரிந்துக் கொண்டிருந்தது. ஆனால் கட்டை வேகவில்லை. அது காத்திருந்தது.
சிதையின் அருகில் சென்ற ராதை சிதையை உற்றுப் பார்த்தாள். ‘என் மகனே!’ என்று பெருங்குர லெடுத்து அழுதாள். ராதையின் கண்ணீர் சிதையில் விழுந்தது! கர்ணனின் கட்டை வேக ஆரம்பித்தது.