முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு ஓய்விற்கு பிறகு சமூக வலைத்தளங்களில் அரசியல் விமர்சனம் செய்து வருகின்றார். எல்லாக் கட்சிகளின் கொள்கை மற்றும் செயல்பாடுகளின் சாதக பாதகங்களை நடுநிலையோடு விமர்சித்து எழுதி வருகின்றார். தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்து எழுதிவந்தாலும், தில்லில் அவர் அமல்படுத்தியுள்ள மொகல்லா சபாவிற்கு பயனம் செய்து தமது அனுபவத்தை “இரண்டு மொஹல்லா மருத்துவமனைகளுக்கு ஒரு பயணம்” எனும் தலைப்பில் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அதன் தமிழாக்கம் கீழே:
ஆம் ஆத்மி கட்சி அமைத்த மொஹல்லா மருத்துவமனைகளைப் பற்றி நான் கேள்விபட்டிருந்தேன் ஆனால் தனிப்பட்ட முறையில் நான் அங்கே விஜயம் செய்ததில்லை. எனவே நான் ஒரு திடீர் விஜயம் செய்ய முடிவுசெய்தேன்.
நான் இரண்டு மொஹல்லா மருத்துவமனைகளுக்குச் சென்றேன், ஒன்று ஜாகீர் நகர், ஓக்லாவில் உள்ள நூஹ் மசூதி பின்னால் உள்ளது, மற்றொன்று ஜொகாபாய் நீட்டிப்பில் உள்ளது.
அவை நெரிசலான பகுதிகளில் இருந்தன, நான் அங்குச் சென்றடைவதற்கு குறுகிய சந்துகள் வழியாகச் செல்ல வேண்டியிருந்தது. இது பல ஏழை மக்கள் வாழும் பகுதி என்று தெளிவாகத் தெரிந்தது.
நான் சென்ற முதல் மருத்துவமனை ஜாகீர் நகர் நூஹ் மசூதி அருகே இருந்தது. அங்கிருந்த டாக்டர் மிர்சா ஆஸம் பெக் என்னை அடையாளம் கண்டுகொண்டார். அவர் மருத்துவமனையைப் பற்றிய பின்வரும் உண்மைகளை என்னிடம் கூறினார்:
1. மருத்துவமனை காலை 9 மணி முதல் 1 மணிவரை இயங்கும், 50-80 நோயாளிகள் இடையே ஒவ்வொரு நாளும் அங்கே வருகிறார்கள்.
2. நீரிழிவு, இரத்த அழுத்தம், தைராய்டு, காய்ச்சல் போன்ற நோய்களுக்கான மருந்துகள் உட்பட சுமார் 80-85 வகை மருந்துகள் நோயாளிகளுக்கு இலவசமாகக் கிடைக்கும் மற்றும் மருத்துவ பரிசோதனையும் இலவசம்.
3. சுமார் 200 வகையான சோதனைகள் அங்குச் செய்ய முடியும்.
4. டாக்டருக்கு ஒப்பந்தம் போடப்பட்டு தில்லி அரசால் ஒவ்வொரு நோயாளிக்கும் ரூபாய் 30 கொடுக்கப்பட்டு வருகிறது.
5. ஒரு நோயியல் மருத்துவர் மற்றும் ஏ.என்.எம். மருத்துவமனையின் பணியமர்த்தப்படுள்ளனர். தடுப்பூசி முதலியன அங்குத் தரப்படுகின்றன.
6.அங்கு எக்ஸ்-ரே இயந்திரம் இல்லை ஆனால் அது அருகில் உள்ள பட்லா நகர் மருந்தகத்தில் கிடைக்கிறது.
7. டாக்டர் மிர்சா என்னிடம், அவர் இந்த நேரத்தில் இரு மடங்கு அதிகமாகத் தனியார் மருத்துவமனையில் சம்பாதிக்க முடியும் என்று கூறினார், ஆனால் அவர் ஒரு நோயாளிக்கு 20 ரூபாய்க்கு கொடுத்தால் கூட பணியாற்றத் தயாராக உள்ளதாகவும் ஏனெனில் ஏழை மக்களுக்கு உதவுவது அவருக்கு மிகப் பெரும் மனதிருப்தி அளிக்கிறது என்றும் கூறினார். மேலும் அவர், உள்ளூர் நோயாளிகள் சஃப்தார்ஜங்க் மருத்துவமனை அல்லது வேறுசில பெரிய மருத்துவமனைகளுக்கு போக வேண்டும் என்றால், அவர்களுக்கு ஆட்டோவிற்கு மட்டுமே 100 ரூபாய் செலவாகும் என்றும், மற்றும் சந்தையிலிருந்து மருந்துகள் வாங்க அதிக பணம் செலவழிக்க வேண்டும், ஆனால் இங்கே எல்லாம் இலவசம் என்றும் கூறினார்.
8. மருத்துவமனை ஒரு வாடகை விடுதியில் இயங்குகிறது, மற்றும் ஒரு ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. மருத்துவமனைக்குச் சில ஃபர்னிச்சர்கள் நன்கொடையாக கொடுத்தார்.
9. நான் அங்கிருந்த சில நோயாளிகளிடம் உரையாடினேன், அவர்கள் அங்கு வழங்கப்படும் மருத்துவ பராமரிப்பு திருப்தியாக உள்ளதென்றனர்.
மேலும் அவர், செய்து கொண்டிருக்கும் வேலையில் திருப்தி இருப்பதாகவும், குறிப்பாக ஏழை மக்களுக்கு உதவுவது சந்தோஷம் தருவதாகவும் கூறினார் . அண்டை மாநிலங்களிலிருந்து மக்கள் மொஹல்லா மருத்துவமனையின் செயல்பாட்டைப் பார்க்க வருகிறார்கள் என்று கூறினார்.
அதன் பின்னர், நான் அந்த மருத்துவமனையிலிருந்து பெஹல்வான் சவுக் அருகே உள்ள இரண்டாவது மருத்துவமனைக்குச் சென்றேன். நடந்து செல்லும் வழியில் ஹாஜி முகமது அலி என்ற ஒரு பண்புள்ள மனிதர் என்னை அடையாளம் கண்டுகொண்டார். அவர் என்னை இரண்டாவது மருத்துவமனைவரை அழைத்துச் சென்றார். அவர், உள்ளூர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமனத்துல்லாஹ் கான் என்ற இளைஞர் வட்டாரத்தில் நல்ல வேலைகளைச் செய்து வருவதாக என்னிடம் கூறினார்.
மேலும் மற்றொரு பண்புள்ள மனிதர், தில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தனிப்பட்ட முறையில் மருத்துவமனையின் நிலையைப் பார்க்க வருவதாகவும் முறையான மருத்துவ சிகிச்சை பெறுகின்றனரா என்பதை நோயாளிடம் விசாரணை செய்வதாகவும் என்னிடம் கூறினார்.
நான் இரண்டாவது மருத்துவமனையை அடைந்ததும் டாக்டர் ப்ரிஜேந்திர சிங் என்ற சீக்கிய மருத்துவரைச் சந்தித்தேன். அவரும் என்னிடம் மிக மரியாதையாக நடந்து கொண்டார். நான் மொஹல்லா மருத்துவமனைகள் உண்மையில் எப்படி வேலை செய்கின்றன என்பதை பார்க்க ஒரு திடீர் ஆய்விற்காக வந்துள்ளதாகக் கூறினேன்.
அவர் ஆய்வு செய்த அனைத்து குழந்தைகளுக்கு வைட்டமின் குறைபாடு இருக்கிறது என்றும் பல பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது என்றும் என்னிடம் கூறினார். வைட்டமின்கள் மொஹல்லா மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கிறது.
மேலும் அவர் அரசாங்க பட்டியலில் சில மருந்துகள் இல்லை என்றும் திறந்த சந்தையில் அவற்றை வாங்குவதற்கு பரிந்துரைக்கப்பட அனுமதி இல்லை என்றும் கூறினார். ஒருவேளை இந்தக் கட்டுப்பாட்டிற்கான காரணம் சில டாக்டர்கள் சில மருந்து நிறுவனங்களுடன் கூட்டாக இருந்து அவர்கள் மருந்துகளை மட்டும் பரிந்துரைக்கிறார்கள் என்று வந்த புகார்களாக இருக்கலாம் என்று நான் கூறினேன். எனவே என் கருத்துப் படி, அரசாங்கத்தின் பட்டியல் டாக்டர்களின் ஆலோசனையுடன் விரிவாக்கப்பட வேண்டும், மலிவான மருந்துகள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்.
இந்த மொஹல்லா மருத்துவமனைப் பற்றி நான் ஒரு நல்ல உணர்வைப் பெற்றேன். இது ஒரு முழு நீள மருத்துவமனை இல்லை, ஆனால் 80 சதவிகித மருத்துவ வியாதிகளுக்கு அங்குச் சிகிச்சை அளிக்க முடியும் என்றும் இலவச மருந்துகள் கொடுக்கப்படுவதாகவும் எனக்குக் கூறப்பட்டது. இதுவரை இந்தியாவில் ஏழை மக்கள் மருத்துவ பராமரிப்பு கிடைக்காமல் இருந்தது, ஆனால் இந்த மொஹல்லா மருத்துவமனைகள் ஒரு நல்ல முன்னுதாரணம் இருக்க முடியும்.
என்னைப் பொறுத்த வரை இது ஒரு நல்ல முயற்சி, இந்தியாவின் பிற மாநில அரசாங்கங்களும் இதைப் பின்பற்ற வேண்டும். உண்மையில், உலகில் இது ஒரு தனிப்பட்ட திட்டம் என்றும் பல நாடுகள் இதைப் பின்பற்ற விரும்புவதாகவும் நான் கேள்விப்பட்டேன். அமெரிக்க செய்தி இதழ் வாஷிங்டன் போஸ்ட் இதைப் பாராட்டியது.
இரண்டு மருத்துவர்களும் தில்லி அரசு சுகாதாரச் செயலாளர் வித்தியாசமான மனிதர் என்றும், அவர் கவனமாக மொஹல்லா மருத்துவமனையின் செயல்பாடுகளைக் கவனித்து வருவதாகவும் கூறினர்.