சென்னை

நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்தளித்தது உள்ளிட்ட பல விதங்களில் தமிழ் இலக்கியத்திற்குப் பங்களித்தவரும் “கதைசொல்லி” இதழின் பொறுப்பு ஆசிரியருமான  கழனியூரன் என்ற எம்.எஸ்.அப்துல் காதர் இயற்கை எய்தினார்.

கழனியூரான் 1954ல் திரு நெல்வேலி மாவட்டத்தில் உள்ள கழுநீர்குளம் என்ற கிராமத்தில் பிறந்தார்.

நெல்லை மாவட்டத்தின் வாய்வழிக்கதைகளைச் சேகரித்து தொகுத்தவர் இவர்.  இப்பணியினால், செவக்காட்டு கதைசொல்லி என்றும் அழைக்கப்படுகிறார்.

இடைநிலை ஆசிரியர் பயிற்சியும் முனைவர் பட்டமும் பெற்ற இவர், கழனியூர் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். .

நெல்லை மாவட்ட கிராமியக் கதைகள், குறுஞ்சாமிகளின் கதைகள், தாத்தா பாட்டி சொன்ன கதைகள், செவக்காட்டு மக்கள் கதைகள், நெல்லை நாடோடிக் கதைகள் உள்ளிட்ட இவரது நாட்டார் கதைகளின் தொகுப்பு நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை.

மறைவாய்ச் சொன்னகதைகள் என்ற பெயரில் கி.ராஜநாராயணனுடன் இணைந்து தொகுத்த நூலும் நாட்டுப்புறக் கதைக்களஞ்சியம் என்ற பெயரில் கி. ராஜநாராயணன், சண்முகசுந்தரம், பாரததேவி ஆகியோருடன் இணைந்து தொகுத்த நூலும் பிரத்யேக தமிழுக்கு  இவர் செய்த பெரும் பணியாகும். . தி.க.சி.என்றொரு தோழமை, வல்லிக்கண்ணன் வரலாறு, போன்ற ஆளுமைகளைப் பற்றிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

பன்னாட்டுச் சிறுவர் நாடோடிக் கதைகள், இரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள் ஆகிய தொகுப்புகளில் அயல்நாட்டு நாட்டுப்புறக் கதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்.

வளர்பிறை தேய்பிறை, இருளில் கரையும் நிழல் ஆகிய நாவல்கள் மற்றும் ஏராளமான சிறுகதைகளும், கவிதைகளும் என புனைவிலக்கியங்களும் படைத்தவர் கழனியூரான்.

சமீபத்தில் உடல் நலம் குன்றியதை அடுத்து சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை இயற்கை எய்தினார்.

அவரது நிகழ்ச்சிகள் நெல்லை மாவட்டம் கழுநீர்குளத்தில் நாளை நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.