ஸ்ரீநகர்:
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் நூற்றுகணக்கானவர்களுக்கு கண்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
காஷ்மீரில், தீவிரவாதி புர்கான் வானி கொல்லப்பட்டத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அடக்க, பாதுகாப்பு படையினர், பெல்லட் கன் (pellet gun) மற்றும் காற்று துப்பாக்கியின் (Air Gun) மூலம் சிறு குண்டுகளை பயன்படுத்தி போராட்டத்தை அடக்கி வருகிறது. இந்த குண்டு தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் கண்பார்வையை இழந்துள்ளனர்.
காஷ்மீரில் 45வது நாளாக தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நினையில், இதுவரை சுமார் 3000 பேர்கள் பெல்லட் குண்டுகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். தெற்கு காஷ்மீரில் காயமடைந்த 5800 பேரில், சுமார் 51 சதவீதம் பெல்லட் குண்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஏராளமானோர் கஷ்மீரை ஆளும் மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
10 மாவட்டத்தில் எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ தகவலின் படி 3000 பேர் பெல்லட் குண்டுகளாலும், 122 பேர் தோட்டாக்களாலும் காயமடைந்துள்ளனர். இதில் 55 சதவீதம் பேர் தெற்கு காஷ்மீரை சேர்ந்த நான்கு மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.
தெற்கு காஷ்மீரிலுள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 11 சட்டமன்ற தொகுதி ஆளும் கட்சியான மக்கள் ஜனநாயக கட்சியே வென்றுள்ளது. இதில் மாநில முதலமைச்சரின் ஆனந்தடங் மாவட்டத்தில் தான் மிக அதிகமாக 1015 பேர்கள் காயம்பட்டுள்ளனர்.
தோட்டக்கள் மூலம் காயமடைந்த 122 பேர்களும் ஆனந்தடங் மற்றும் குல்கம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
போராட்டத்தில் ஈடு பட்டவர்களில் இதுவரை 68 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 50 பேர் தெற்கு காஷ்மீரை சேர்ந்தவர்கள். வட காஷ்மீரிலுள்ள பாரமுள்ள (831), குப்வாரா (786) மற்றும் பன்டிபோரா (517) பேர்கள் காயமடைந்து உள்ளனர். அதில் 1136 பேர் பெல்லட் குண்டுகளால் காயமுற்றவர்கள். மேலும், மத்திய காஷ்மீரின், புத்கமில் 246 பேரும் கந்தர்பெல் 126 பேரும் ஸ்ரீநகரில் 146 பேரும் காயமடைந்துள்ளனர்.
மொத்தம் 972 பேர்களின் கண்களில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 2600 பாதுகாப்பு படை வீரர்களும் காயம்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்பார்வை இழந்தவர்கள் ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வருகின்றனர். அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், “கடந்த 4 நாட்களில் மட்டும் 100 பேருக்கு கண் அறுவை சிகிச்சைகளை செய்துள்ளோம்” என்று கூறுகின்றனர். மேலும் சிகிச்சை மேற்கொண்ட அனைவரும் தங்களின் கண் பார்வையை இழக்க நேரிடும் என்று ஒரு பெயர் வெளியிட விரும்பாத மூத்த மருத்துவர் கூறியுள்ளார்.