பாட்னா:

பீகார் கல்வி துறை சார்பில் 7ம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வி தாள் விநியோகம் செய்யப்பட்டது. அதில் இந்த நாடுகளில் வசிக்கும் மக்களை என்ன பெயரில் அழைப்பாளர் என்ற கேள்வி கேட்கப்பட்டிரு ந்தது. நாடுகள் பட்டியலில் சீனா, நேபாளம், இங்கிலாந்து, இந்தியா மற்றும் காஷ்மீர் என்று இடம்பெற்றிருந்தது.

இந்த தவறை ஒரு மாணவன் தற்போது வெளிப்படுத்தியுள்ளான். இந்த கேள்வி தாளை தயாரித்த மற்றும் அதற்கு மதிப்பெண் அளிக்காத ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பீகார் கல்வி திட்ட குழு அதிகாரி ராஜீவ் ரஞ்சன் பிரசாத் கூறுகையில், ‘‘ இது அச்சடிப்பில் ஏற்பட்ட தவறாகும். இதற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. விடைத்தாள் திருத்தும் போது இந்த கேள்வி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. இது எப்படி நடந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். இது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார்.

பீகார் கல்வி துறையில் சர்ச்சை ஏற்படுவது தற்போது புதிதல்ல. கடந்த ஆண்டு பள்ளியளவில் முதல் மதிப்பெண் பெற்ற ரூபி ராய் என்பவர் டிவி ஒன்றின் ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கினார். மதிப்பெண் பெற பணம் கொடுத்த விவகாரத்தில் இவர் உள்பட 20 மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

2015ம் ஆண்டில் தேர்வு அறையின் சுவற்றில் மாணவ மாணவிகளின் உறவினர்கள் ஏறி ‘பிட்’ கொடுத்ததாக வெளியான புகைப்படம் பீகாருக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.