டில்லி:

காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது. அதை பாதுகாக்க எல்லை தாண்டவும் தயார் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

டில்லியில் சிஎன்என் நியூஸ் 18 சார்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்,‘‘ நாட்டை காப்பாற்ற எல்லை தாண்டியும் ராணுவம் செல்லும். ராணுவம் உள்நாட்டை மட்டும் பாதுகாக்கவில்லை. நாட்டை காக்க வேண்டும் என்றால் அதற்காக எல்லை தாண்டியும் செல்வோம். காஷ்மீர் பிரச்சினையில் நிரந்தர தீர்வுக்கு இந்தியா விரும்புகிறது. அதனால் தான் பேச்சுவார்த்தைக்கு உளவுத்துறை முன்னாள் தலைவர் தினேஷ்வர் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு ஆர்வமாக உள்ளவர்களிடம் தினேஷ்வர் சர்மா சென்று பேசுவார். பாகிஸ்தான் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து பிரிக்க முடியாது. காஷ்மீர் இந்தியாவுடன்தான் தொடர்ந்து இருக்கும். அதை பாதுகாக்க எல்லை தாண்டவும் தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘பாகிஸ்தானுடன் இந்தியா நட்புறவுடன் இருக்கவே விரும்புகிறது. ஆனால் இதுல் பாகிஸ்தானுக்கு விருப்பமில்லை. ஐ.நா.சபையால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்க நிறுவனர் ஹபீஸ் சயீத்துக்கு அரசியல் அங்கீகாரம் கொடுத்துள்ளது.

அவர் அரசியல் கட்சி தொடங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அவர் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றம் செல்வார். இது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்து உள்ளது’’என்றார்.