ஸ்ரீநகர்,
காஷ்மிர் மாநிலத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் பிறந்து 6 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை எலிகளால் கடித்து குதறப்பட்டு உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் எலிகள் கடித்து பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலம் கிஷ்துவார் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, சத்துரு கிராமத்தை சேர்ந்த குலாம் உசேன் என்பவரது மனைவிக்கு வியாழக்கிழமை ஆண் குழந்தை பிறந்தது.
ஒரு நாள் முழுவதும் சிறப்பு அறையில் தாய்- குழந்தையை வைத்து இருந்தனர். பின்னர் பொது வார்டுக்கு அவர்கள் மாற்றப்பட்டனர்.
சம்பவத்தன்று காலை குலாம் மனைவி தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை எடுக்க சென்றார். அப்போது, அங்கு தொட்டிலில் குழந்தை இறந்து கிடந்தது.
குழந்தையின் உடல் முழுவதும் எலி கடித்த காயங்கள் இருந்தன. குறிப்பாக தொப்புள் கொடியை துண்டித்து இருந்த இடத்தில் எலிகள் அதிகமாக கடித்து குதறி இருந்தன. இதனால் தான் குழந்தை இறந்தது தெரிய வந்தது.
இந்த பரிதாபமான குழந்தை இறப்பு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
குழந்தைகள் வார்டுக்குள் வந்து எலிகள் கடித்து குதறியிருப்பதை ஒருவரும் கவனிக்காமல் இருந்ததும், குழந்தை அழும் சந்தேம் ஒருவருக்கும் கேட்கவில்லையா என்பதும் அதிர்ச்சியாக உள்ளது.
இதுபற்றி மருத்துவ அதிகாரியிடம் குழந்தையின் பெற்றோர் புகார் செய்தனர்.
சம்பவ இடத்தை பார்வையிட்ட, மாவட்ட சுகாதார இயக்குனர் குர்ஷித்சிங் கூறும் போது, அந்த குழந்தைக்கு ஏற்கனவே உடல்நலக்குறைவு இருந்து வந்தது. அதே நேரத்தில் தொப்புளில் எலியும் கடித்ததால் இறந்துள்ளது.
இது சம்பந்தமாக நாங்கள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம் என்று கூறினார்.