சென்னை: கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 39ஆக உயர்ந்த நிலையில், பலியானவர்களில் 35 பேரின் உடல்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் நேற்று பிரசாரம் கரூரில் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரசாரம் செய்தார். அவருக்கு பிரசாரத்துக்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அலைகடலென கூடிய கூட்டத்தில், விஜய் பேசி முடித்து புறப்பட்டபின், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். மேலும், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 50 பேரும், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 61 பேரும் என மொத்தம் 111 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 17 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த முதல்வர் ஸ்டாலின் இரவோடு இரவாக நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், இறந்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தினார்.
இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 35 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 28 பேர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ள 4 பேரின் உடல்களை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தோர் உடலுக்கு நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சிகிச்சை பெற்று வருவோருக்கு ஆறுதல் கூறினார். இந்நிலையில், அடையாளம் காணப்பட்ட 35 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் தங்கள் உறவினர்களை ஆம்புலன்சில் ஏற்றிச் சென்றனர். உயிரிழந்தோர் உடல்களைப் பெறும்போது உறவினர்கள் கதறி அழுதது உருக்கத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் நெரிசலில் சிக்கி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர்காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், விடுப்பிலுள்ள மருத்துவர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டதுடன், நாமக்கல், சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
