சென்னை:  முதல்வர் விஜயின் கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தின்போது 41 பேர் பலியான சம்பவத்தில்,  பாதுகாப்புப் பணியில் இருந்த துணை காவல் கண்காணிப் பாளர் உள்பட 19 காவலர்களை டிஜிபி அதிரடியாக  பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

கரூரில்  கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் பரப்புரை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி அப்பாவி பொதுமக்கள் 41 பேர் உயிரிழந்தனர். இதற்காக காரணம் செந்தில் பாலாஜி என தவெகவினர் குற்றம் சாட்டினர்.  இந்த வழக்கை கரூர் காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், அப்போதைய திமுக தலைமையிலான அரசு சார்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

அந்த குழு நடத்திய விசாரணையில், விஜய் தாமதமாக வந்ததும், எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக கூட்டம் சேர்ந்ததும் தான் கூட்டநெரிசல் விபத்துக்கு காரணம் என அறிக்கை சமர்பித்தது.

இந்த விவகாரத்தில் காவல்துறையினர் ஒருதலைப்பட்சமான விசாரணை நடைபெற்றதாக கூறி, தவெக சார்பில், இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரிக்க வேண்டுமென வலியுறுத்திய நிலையில், உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் வழக்கு சிபிஐ வசம் முழுமையாக மாற்றப்பட்டது.

இதனைதொடர்ந்து கரூர் கூட்டநெரிசல் மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களை பிடித்து, பிற கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சராக பதவியேற்றார். மேலும், தவெக ஆட்சி அமைந்த முதல் காவல்துறை மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து, முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் முதல் காவலர்கள் வரை பலரை பணியிட மாற்றம் செய்து காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) மூலம் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உள்ளது. குறிப்பாக கரூரில் விஜய் பரப்புரை கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உள்பட காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் மட்டும் மூன்று துணை காவல் கண்காணிப்பாளர்கள், 10 காவல் ஆய்வாளர்கள், ஐந்து உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டு 19 காவல்துறையினர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, இதில் சில காவலர்கள் தெற்கு மண்டலத்திற்கும் வடக்கு மண்டலத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஜூன் மாதத்திலிருந்து 200 யூனிட் இலவச மின்சாரம் – அமைச்சர் நிர்மல் குமார் உறுதி
கரூர் டவுன் காவல்துறையின் கண்காணிப்பாளராக இருந்த செல்வராஜ் தூத்துக்குடி மாவட்டத்திற்கும், குளித்தலை காவல் துறை கண்காணிப்பாளர் கடலூர் மாவட்டத்திற்கும், அரவக்குறிச்சி காவல்துணை கண்காணிப்பாளர் தர்மபுரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அதேபோல், 10 காவல் ஆய்வாளர்கள் தெற்கு மற்றும் வடக்கு மண்டலத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தனிப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமை காவலர் என 5 பேர் தெற்கு மற்றும் வடக்கு மண்டலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சிபிஐ கரூரில் 41 பேர் இறந்த சம்பவத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ், காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்டோரையும் விசாரணை செய்தது. இந்த நிலையில் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

[youtube-feed feed=1]