சென்னை:  திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களைத்  தொடர்ந்து கரூர் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி  நண்பர்கள் நிறுவனங்களில் ஐடி ரெய்டு நடைபெற்றது. இதில்  ரூ.7 கோடி சிக்கியது

தமிழக சட்டமன்ற தேர்தல் பரபரப்புக்கு இடையில் வருமான வரித்துறையினரின் அதிரடி ரெய்டுகளும் பரபரப்பை உருவாக்கி வருகிறது. நேற்று திருவண்ணாமலை திமுக எம்எல்ஏ எ.வ.வேலுவின் வீடு மற்றும் நண்பர்கள், உறவிகர்கள், அவரது நிறுவனம் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்ற நிலையில், நேற்று இரவு கரூர் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்களிலும், அவரது நண்பர்கள், உறவினர்களின் இடங்களிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது.

செந்தில் பாலாஜியின் நண்பர் நிறுவனமான, கரூர் திண்ணப்பா தியேட்டர் அருகே உள்ள டெக்ஸ் யார்டு இன்டர்நேஷனல் , முருகன் அண்ட் கோ டைல்ஸ் நிறுவனம், 80 அடி சாலையில் இயங்கிவரும் வரும் குளோபல் பைனான்ஸ் அண்ட் பேக்ஸ்,  மூன்றுக்கும் மேற்பட்ட பைனான்ஸ் நிறுவனங்கள், ராம்நகர் யுனைட்டட் எக்ஸ்போர்ட், உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்திவருகின்றனர்.

சுமார் 50க்கும் மேற்பட்ட வருமானவரிதுறை அதிகாரிகள்  பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருவதாகவும்,  இதில் கணக்கில் வராத 7 கோடி ரூபாய் பணம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கரூரில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து இன்று (மார்ச் 26)  திமுக தலைவர் முக ஸ்டாலின் பரப்புரை  மேற்கொள்ள உள்ள நிலையில் இரவில் தொடரும் இந்த வருமான வரி சோதனையால் பரபரப்பு நிலவுகிறது.

நேற்று எ.வ.வேலுக்கு ஆதரவாக ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள இருந்தபோதுதான் அங்கும் ரெய்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.