சென்னை:
கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட கருப்பர் கூட்டம் சேனல் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.

கருப்பர் கூட்டம் என்ற, ‘யு டியூப் சேனலில்’ கந்த சஷ்டி கவசத்தை, ஆபாசமாக சித்தரித்து, வீடியோ வெளியிடப்பட்டது. இதனால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டன.
இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, இது தொடர்பாக சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தொகுப்பாளரான நாத்திகன் என்கிற சுரேந்தர் நடராஜன் புதுச்சேரி அரியாங்குப்பம் கோட்டைமேடு பகுதியில் தமிழக போலீசாரிடம் சரணடைந்தார்.
இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட செந்தில்வாசனிடம் நடத்திய விசாரணையில் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு வீடியோ தயாரிக்கும் ஸ்டுடியோவாகச் செயல்பட்டு வந்த சென்னை தி.நகர், நியூபோக் சாலையில் உள்ள அலுவலகத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு செய்தனர். அதில் ஹார்ட்டிஸ்க், பென் டிரைவ், லேப்டாப் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றினர்.
மேலும், மத்திய குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி மற்றும் உதவி ஆணையர் தலைமையில் அலுவலகத் தைப் பூட்டி சீல் வைத்துச் சென்றனர். தற்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஒரு போலீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel