கருந்தமலை மாயோன் காவியம்பாகம் 5

ராக்கப்பன்

கருப்பர் அழைப்பு

மூதாதையர் கூட்டம் தமது கடவுளை தேடி அறிவுடை நம்பியிடம் வந்தார்கள். அறிவுடை நம்பியோ, அதன் விடையை தான் அறியவில்லையானாலும் அதன் விடை அறியும் தலம் தாம் அறிவதாக சொன்னார். அது அவர்கள் குல நாயகன்  கண்ணப்பர் வணங்கிய சிவஸ்தலமாகும் என்றார். அந்த சிவனே அவர்களின் கேள்விக்கான விடையளிக்கமுடியும் என்றார்.

அத்திருத்தலத்திற்கு தாமே அழைத்துச்செல்வதாக கூறினார். மூதாதையர் கூட்டமும் தம் கடவுள் தேடி, தம் கூடு துறந்து, நாடு நோக்கி செல்லத் தயாரானார்கள். காலமும், நாட்டாரும் அவர்களை இருகரம் நீட்டி வரவேற்க தயாரானார்கள்.

விஜயரகுநாத தொண்டமானுக்கோ தான் எண்ணிய எண்ணம் திண்ணம் ஆனதில் உள்ளூர மகிழ்ச்சியே. கடுமையான போர்ப்பயிற்சி, வலிமையான வில்லம்பு கூட்ட படையினர், களம் காணா வல்லாயுதம் வளரி, அன்பொழுகும் உழைக்கும் கூட்டமான மூதாதையர் கூட்டம், தமக்கான உணவு  தேவைகளை பூர்த்தி  செய்யக்கூடிய  காடுகள், இவைகளோடு சமவெளி  நோக்கி, தனக்கான நாடு தேடி புறப்பட தயாரானார். இருந்தும், தனக்கான ஆருயிர் நண்பர் கருப்பரும் அவரது கூட்டமும் தம்மோடு வரவில்லை என்ற ஆதங்கம் மட்டும் இருந்தது.

காடுகளுக்கு விடையளிக்கும் காலம் வந்தது. காடுகள் மக்கள் தம்மை விட்டு பிரிந்தவுடன், திரும்பி வந்து தம்மை தான் முதலில் தாக்கி அழிப்பார்கள் என்று அறியாமல் விடையளித்து. கருப்பரும், தனது ஆருயிர் நண்பர் விஜயரகுநாத தொண்டமானுக்கு பெரும் பசுக்கூட்டத்தை பரிசளித்தார். கூடவே, பெரும் அளவிலான ஆடுகளையும் பரிசளித்தார். அள்ளிக்கொடுக்கையிலும், எண்ணி கொடுக்காதக் கூட்டம் அந்த ஆயர் கூட்டம்.

சமவெளி நோக்கிய பயணம் தொடங்கியது. துயரத்தை நோக்கி பயன்படுகிறோம் என்பதை அறியாமல் அனைவரும், பெரும் பசு திரவியங்களுடன் பயணப்பட்டார்கள். சமவெளி மக்கள் வில் அம்பர் கூட்டத்தை வல்லம்பராகவும், மூதாதையர் கூட்டத்தை முத்தரையராகவும் வரவேற்றனர். தொண்டியில் இருந்து வந்த சிறு அளவிலான பெரும் வணிகர்களும், அங்கே இருந்த இயர்குடியானவர்களும், வல்லம்பருமாய், முத்தரையருமாய் ஒரு புது சமூகம் நிர்மானமானது.

விஜயரகுநாத தொண்டமானுக்கு தனது பகைமுடிக்கும் தருவாய் வந்ததாக கருதினார். அறிவுடை நம்பி மற்றும் ரகுநாத தொண்டமானுடன், வல்லவராயர்கள் பகை முடிப்பதற்கான ஆயத்தங்கள் குறித்தான ஆலோசனை செய்தார்.

அறிவுடை நம்பி, அத்தருணத்தை எதிர்பார்த்தவராய், தமது தாக்குதல் படையணி போதிய வலுவுடன் இருக்கிறது. அந்த படையணி, எந்த எதிரியையும் எதிர்கொள்ளும் தெம்பும், திராணியும் நிறைந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால், நாம் வல்லவராயர்களை நோக்கி படை நகர்த்தும் தருவாயில் நமது குடிமக்களின் இருப்பிட காத்தலுக்கான படையணி பற்றாக்குறையை சுட்டிக்காட்டினார்.

ரகுநாத தொண்டமானோ, அப்படி ஒரு தாக்குதல் நிகழ வாய்ப்பிருக்குமா என்று ஐயத்தோடு கேட்டார்.

அறிவுடை நம்பி அப்படி ஒரு தாக்குதல் திட்டம் எதிரியிடம் இருக்காது என்று யாராவது உத்தரவாதம் தரமுடியுமா என்றார் ?

வினாவின் விபரீதம் புரிந்த விஜயரகுநாதரோ, இதற்கான தீர்வு என்ன என்பதை அறிவுடை நம்பியிடம், பார்வையால் கேட்டார்.

அறிவுடை நம்பி, நாம் பார்த்ததில் காப்பரண் காவல் பணியில் யார் சிறந்தவர்கள் என்று நினைக்குறீர்கள் என்றார். சிறிய யோசனைக்கு பின் சற்றும் தயங்காமல் கருப்பர் கூட்டம் என்றார்.

அறிவுடை நம்பிகள் அதை ஆமோதித்தார்.

கருப்பர் கூட்டத்தை நம்பி மட்டுமே நமது பெண்டிரையும், பிள்ளைகளையும் ஏனைய குடிமக்களையும் காக்கும் பணியை தரலாம். நிச்சயம் அவர்கள் உயிர் கொடுத்தேனும், அவர்கள் காவல் பொருள் காப்பர் என்றார்.

அதுவும் நல்ல யோசனையாக பட்டது. ஆனால், கருப்பர் கூட்டத்தை எப்படி அழைத்து வருவது ? கேள்வி தொற்றி நிற்கிறது ! விடியலில், விஜயரகுநாதரும் அறிவுடை நம்பிகளும் கருந்தமலை சென்று கருப்பரை அழைத்து வருவதாக முடிவுசெய்தனர்.

விடிந்தும் விடியாத அந்த விடியல் பொழுதில், தம் இனத்திற்கான விடியலை தேடி காரிருள் கருந்தமலை நோக்கி விஜயரகுநாதரும், அறிவுடை நம்பிகளும் பயணப்பட்டார்கள். கருப்பரை எப்படி சம்மதித்து அழைத்து வருவது என்பதிலே அறிவுடை நம்பிகளின் எண்ணங்கள் நிழலாடின !

கருந்தமலை எப்போதும் போல உதிக்கும் சூரியன் தனக்காக என்பதுபோல இயற்கை வளமையுடன், அறிவுடை நம்பியையும் விஜயரகுநாதரையும் வரவேற்று நின்றது. கருப்பரும் முன்னிரவு சொப்பனங்களால் மனம் சஞ்சலத்திருந்தார். அவர் கண்ட கனவில், வெட்டறுவாள் விண்ணைத்தாண்டி உயர்ந்து நின்றது.

அத்தனை பெரிய வெட்டறுவாள் நிச்சயம் அவர் நினைவில் கண்டதில்லை. அதன் பொருள் உணராமல் இருந்த வேளையில் விஜயரகுநாத தொண்டைமானும் அறிவுடை நம்பியும் வருவதை அறிந்து, அவர்களுக்கு சிறப்பான ஒரு வரவேற்பை தந்தார்.அவர்களை,  ஆசுவாச படுத்திய பின்னர், அவர்கள் வந்ததற்கான காரணம் வினவினார்.

முகம் கண்டு மனம் அறியும் ஆற்றல் படைத்த அறிவுடை நம்பி அவர்கள், கருப்பரின் முகத்தைக்கொண்டு அவர் மனதில் உள்ள சஞ்சலம் என்ன வென்று வினவினார்.

கருப்பர், தம் மனம் அறிந்து வினாவிய அறிவுடை நம்பியாகிய தமது குல குருவிடம், தனது முன்னிரவு கனவை விவரித்தார்.

அறிவுடை நம்பி, தமது பயணத்திற்கான களம் அமைந்ததாக உள்மனதில் எண்ணி, வானுயர் வெட்டறுவாள் அவருக்கான காவல்பணியை, மக்கள் பணியை குறிப்பதாகவும் அதனால் அவர் கீர்த்தி உலகபுகழடையும் என்றும் விளக்கமளித்தார்.

மேலும், தாங்கள் பகைமுடிப்பதற்காக வல்லவராயர்களை நோக்கி படைநகர்த்தும் பொழுது தங்கள்  குடி காக்கும் பணியை, கருப்பர் வந்து காவல் பணி செய்யவேண்டும் என்றார். முன்னிரவு கனவும், அறிவுடை நம்பிகளின் விளக்கமும் பொருந்துவதாக உணர்ந்த கருப்பரும் தமது தமக்கை வீரத்தாளின் உத்தரவை மறந்து மலையில் இருந்து கீழிறங்கி வந்து, விஜயரகுநாதரின் குடிக்காக்க சம்மதித்தார். அதுவே, ஆண்டவனின் சித்தம், தனது பாக்கியம் என்றார்.

கருப்பரும் தமது சகோதரர்கள் ஏழ்வருடன் தமது கூட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 சிறந்த வீரர்களுடன் பயன்பட்டார்.

விஜயரகுநாதர், அறிவுடை நம்பிகள் இருவரும் தமது குலம் காக்கும் தெய்வமாய் கருப்பரை கருந்தமலையில் இருந்து அழைத்துவருகிறோம் என்பதை அறியாமல்  அழைத்துவந்தார்கள்.

கருந்தமலையில், காரிருள் சூழ்ந்து கருமேகம் திரண்டு, வான்மழை பொழிந்தது. அது கண்ணீர் மழையோ என்பதை அன்று யாரும் அறிந்திருக்கவில்லை. வீரத்தாளிடம் விடை பெறாமல் பயணப்படுகிறோம் என்று கருப்பரும் கண்ணீர் வடித்தார். அவர் கண்ணீர், மழை நீரில் யாரும் அறியாவண்ணம் கரைந்து சென்றது. வீரத்தாளோ, தன் சத்தியம் மீறி பயணப்படும்  அண்ணன்மாரை எண்ணி  கண்ணீர் வடித்தாள்.

கருப்பரை வரவேற்க ஊரே விழாக்கோலம் பூண்டது. ஊர் காக்கும் குல தெய்வம், குலம் காக்கும் கருப்பரை காண ஊர்குடி அனைத்து  வழியெங்கும் திரண்டு நின்றது. கருப்பரின் குதிரை மீதான சவாரி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. வெட்டறுவல் மீசை, வில் போன்ற புருவம், ஈட்டி போன்று செதுக்கிய மூக்கு, விசாலமான நெற்றி, பெண்டிர் பொறாமை கொள்ளும் கருங்கூந்தல், முறுக்கேறிய தேகம், சந்தனம் மணக்கும் உடலோன், நீட்டிய வீச்சருவாள் காண்போரை பயமுறுத்தியது.

ஆனால், அவர் புன்னகையோ அனைவரையும் கையெடுத்து கும்பிட வைத்தது. அதுவரை தங்கள் கோவில்களில் உள்ள உற்சவருக்கு மட்டுமே அளித்த வரவேற்பை, குடி மக்கள் கருப்பருக்கு அளித்தனர். மண் காக்கும் தெய்வங்களை, மனித மனங்கள் தாமறியும். சேய்க்கு எப்படி தன் தாய் அறியுமோ அது போல் குடி மக்கள் யாவரும் தம் தெய்வமாய் கருப்பரை அறிந்திருந்தார்கள்.

மக்கள் அளித்த வரவேற்பை பார்த்த கருப்பரும் அவர் கூட்டமும், தமக்கான பிறவிப்பயன் நோக்கி பயணிப்பதாக உணர்ந்தார்கள். அக்குடி காக்க உளமார சபதமேற்றார்கள். ஊர் காக்கும் தெய்வங்கள், உறவுகள் வழி தோன்றும் என்பதை சரித்திரம் பதிந்து வைத்திருக்கிறது.

கருப்பரின் காவல்பணி தொடங்கியது. அது காலம் தொட்டு தொடரும் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.

குலம் காக்கும் தெய்வங்கள் சுயம்புவாய் தோன்றும் என்பதை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.