கருந்தமலை மாயோன் காவியம்பாகம் 10

ராக்கப்பன்

திருப்பத்தூர் அய்யனார் கதை

 

ராவுத்தர் அய்யாவுக்கு சிலையெடுத்து கோவில் கண்ட பட்டமங்கள நாட்டார், ராவுத்தர் குடும்பத்தை பட்டமங்கள நாட்டுக்கு குடிபெயர அழைத்தார்கள். ராவுத்தர் மகன் அப்துல்லாவும் தன் தந்தை மறைந்த இடத்திற்கே குடிபோக நினைத்தார். தனது நண்பனின் மகன் தனியாக குடிபெயரவேண்டிய தேவை இருந்ததால், கருப்பரின் இரண்டாவது  மகன் சின்ன கருப்பனை அவனோடு அனுப்பினார். சின்ன கருப்பனுக்கு போதிய ஆடும் மாடும் கொடுத்து அனுப்பினார்.

கருப்பனின் ஒரே மகள் சிகப்பி பருவம் எய்தினாள். அவளுக்கு, திருப்பத்தூரை அடுத்துள்ள சின்ன பட்டி சேர்ந்த வைரவன் என்ற மணமகனுக்கு திரு பூட்டு செய்ய நினைத்தார். வைரவன், ராக்கப்பனுக்கு நல்ல பரிச்சயமானவன். மந்தைகளை மேய்ப்பதில் அலாதியான திறமையுடையவன். மிக கம்பீரமான தோற்றம் கொண்டவன். ஆனால், மலையடி வம்சங்களிலிருந்து வெளியே சம்பந்தம் முடிப்பதில் தான் சற்று தயங்கினார் ராக்கப்பன். ஆனால், காலத்தின் கட்டாயத்தையும், மாற்றத்தையும் ஏற்க கூடிய பக்குவத்தில் இருந்தார்.

திருப்பூட்டிற்கு முந்தய இரவு, அக்காள் வழிபாடு நடந்தது. பங்காளிகள் மட்டுமாக தங்களுது பெண் குலதெய்வமான அக்காள் -ஐ உருவக படுத்தி, நினைவுகூர்ந்து மெய் உருக வழிபட்டார்கள். அக்காளுக்கு படைக்க பட்ட படையலை, தங்கள் குடும்பத்தார் அன்றி வேறுயாருக்கும் கொடுக்கவுமில்லை, அந்த வழிபாட்டில் வேறு யாரையும் சேர்க்கவுமில்லை.

திருப்பூட்டு விஜயரகுநாத தொண்டமானின் தலைமையில் நடந்தது. அரசர் தலைமை ஏற்றாலும் எளிமையான திருப்பூட்டு. மலைக்கிராம பழக்கமும் ஊர் பழக்கமுமாக, திருப்பூட்டு ஒரு கலவையாக இருந்தது. திருப்பூட்டு விருந்து தாமரை இலையில் பரிமாறப்பட்டது. மாமன் முறை சீரை ராவுத்தர் அய்யா மகன் அப்துல்லா மிக சிறப்பாக செய்தார். ராக்கப்பனின் மைத்துனன் ஆதியா கோன் வரவேற்பை கவனித்தார். கோட்டை கருப்பர் மற்றும் சங்கிலி கருப்பரை வணங்கி அத்திருக்கோவிலில் இருந்து மாலை கொண்டு வந்து திரு பூட்டிற்கு மணமக்களுக்கு அணிவித்தனர்.

அதே விழாவில், ஆதியா கோன் மகள் கருப்பாயிக்கும் கருப்பனின் மூத்த மகன் பெரியகருப்பனுக்கும் திருப்பூட்டு நிச்சயம் ஆனது. கருப்பரின் குடும்பத்தில் தொடர் மரணங்களுக்கு பிறகு நல்ல விடயங்களாக நடப்பது ராக்கப்பனுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. தொடர் சீதனங்களாக கொடுக்கப்பட்டு ராக்கப்பனின் வளங்கள் வற்றியது.

பட்டமங்கள நாட்டுக்கு குடிபெயர்ந்த சின்ன கருப்பன், பட்டமங்கலத்தை அடுத்த ஆற்றுக்கு வெளியே இருந்த ஊரில் பிறந்த சிட்டாலை மனம் முடித்தார். காலப்போக்கில் அதுவே வெளியாத்தூர் ஆக, சின்ன கருப்பனும் அந்த ஊருக்கே குடிபெயர்ந்து பட்டி அமைத்தார்.

காலங்கள் உருண்டோடியது.வசந்தம் போய் வறுமையும் வந்தது. தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வானம் பொய்க்கவே, திருப்பத்தூரை சுற்றி உள்ள பகுதியில் வறட்சி கோரத்தாண்டவமாடியது. ராக்கப்பனின், மாடுகள் நீரின்றி மரிய தொடங்கியது. தன் கண் எதிரே, தன் மாடுகள் மரணிப்பதை ராக்கப்பனால் காணமுடியவில்லை.

திருப்பத்தூர் பெரிய கண்மாயில் இருந்த சொற்ப நீர் அந்த பகுதி மக்களுக்கு ஆன நீர் ஆதாரமாக இருந்தது. ஆனால், அதே நீருக்காக மணல்மேல் பட்டி சேர்ந்தவர்களும் போராடினார்கள். திருப்பத்தூர் கண்மாய், பெருகும் போது  மணல்மேல்பட்டிக்கு பாயும். ஆனால், நீர் அற்ற திருப்பத்தூர் கண்மாய் சொற்ப நீரை பாய்ச்ச மணல்மேல்பட்டியினர் போராடினார்கள்.

மணல்மேல்பட்டியில் உயிரினங்கள் பாதி செத்து மாண்டது. உயிர் பிச்சைக்காக நீர் கேட்டு மணல்மேல்பட்டியினர் மன்றாடினார். திருப்பத்தூரும் நீருக்காக தவித்தது. இருக்கின்ற நீரை கொடுத்தால் திருப்பத்தூர் மக்கள் மடியவேண்டி வரும். விடை அற்ற ஒரு வினா பெரும் கலவரத்தில் முடியும் என்று யாரும் அறிந்திருக்கவில்லை.

மணல்மேல்ப்படியில் இருந்த இளைஞர்கள் சிலர், தங்கள் மக்கள் தன் கண்ணெதிரே மரிப்பதை கண்டு மனம் பொறுக்காமல், இரோவோடு இரவாக திருப்பத்தூர் கண்மாய்க்கு சென்று மடை திறந்து நீர் கொண்டு வருவது என்று முடிவு செய்து புறப்பட்டார்கள்.

நடு நிசி கழிந்த இருளில், கண்மாய் மதகு வரை சென்று விட்டார்கள். அங்கே, அவர்கள் சற்றும் எதிர் பாராத விதமாக கருப்பனின் கடைசி மூன்று மகன்கள் காவலில் இருந்ததை கண்டார்கள். எண்ணிக்கையில் கூடுதலாக இருந்த படியால், கருப்பனின் மூவர்தானே அவர்களை விரட்டிவிடலாம்  என்று மணல்மேல்பட்டியினர் கூட்டமாக சுற்றி வளைத்தனர். கருப்பனின் மகன்களின் சமாதான பேச்சுக்கள் எடுபடவில்லை, விடிந்ததும்  பேசிமுடித்துக்கொள்ளலாம் என்ற பேச்சு யார் செவிக்கும் எட்டவில்லை.

பேச்சுகளுக்கு வாய்ப்பில்லாத போது வன்முறை தான் தீர்வாகும். வந்திருந்த விருந்தாளிகளை, கருப்பனின் மக்கள் அறுவால்களாலும், வேல்கம்பாலும் பதில் தந்தனர். வந்தவர்களும், வீரத்தில் சளைத்தவர்கள் இல்லை. கடுமையான போராட்டம் நடந்தது. அதே வேளையில், திருப்பத்தூரை சேர்ந்த மாற்று காவலுக்கு வரவேண்டிய மூவரும் வந்துகொண்டிருந்தார்கள். தூரத்தில் நடக்கும் விபரீதத்தை உணர்ந்த மூவரும் பதைபதைத்தனர். அதில் ஒருவனை ஊருக்குள் அனுப்பி மேல் அதிகமானவர்களை அழைத்து வர செய்தார்கள். எஞ்சிய இருவரும் போராட்ட களம் காண விரைந்தனர். கருப்பரின் மகன்களோடு சேர்ந்த இருவருமாக, உக்கிரமாக சண்டை இட்டனர். தண்ணீருக்காக வந்தவர்கள் ரத்தத்தை கொண்டு திருப்பத்தூர் கண்மாயை கழுவினார். எத்தனை தலைகள் சரிந்தன என யாரும் எண்ணிக்கொள்ளவில்லை.

அதற்குள், வானம் இருண்டது. கருமேகம் திரண்டது. பெரும் மழை பெய்தது. திருப்பத்தூர் கண்மாய் கரையில், அவர்கள் சிந்திய ரத்தக்கறையை கழுவி கண்மாயில் கலந்தது. கருப்பனின் மகன்களின் மனதில், அந்த ஒரு இரவு கழிந்திருத்தக்க கூடாதா, தம் கையால் யாரும்மடிந்திருக்க வேண்டியிருக்காதே என்று எண்ணி  மறைந்தது.

வந்தவர்களும் பின்வாங்குவதாக இல்லை, அது உயிருக்கான போராட்டம், வீரம் நெஞ்சினில் நிறைந்து இருந்தது. அதே வேளையில், ராக்கப்பனும் திருப்பத்தூராருடன் கண்மாய் மதகை வந்து அடைய, அதே வேளையில் மணல்மேல்பட்டி ஊர் பெரியவர்களும் அங்கு வந்து சேர்ந்தார்கள்.

கொட்டிய மழையில் எங்கு திரும்பினாலும் சாய்ந்த உடல்களும், உடல் அங்கங்களும். ஆனால், ஒருவரும் அங்கிருந்து உயிர்பிழைக்க ஓடவில்லை என்பது மெய்சிலிர்க்கும் செய்தி. கருப்பனின் மகன்கள் மூவரும் மடிந்தார்கள்.

அவரோடு சேர்ந்த திருப்பத்தூரை சேர்ந்த இருவீர்களும் மடிந்தார்கள், ஆனால் திருப்பத்தூர் மதகு திறக்கப்படவில்லை. மணல்மேல்பட்டியினர் எத்தனை பேர் மடிந்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், மடிந்தவர்கள் பாதி, அவயங்கள் இழந்தோர் மீதி என அங்கு எங்கும் மனித உடல்கள்.

ராக்கப்பனின் பெரும் முயற்சியால் சமாதானம் ஏற்படுத்தப்பட்டது. ராக்கப்பனை விட மழை அவர்களை ஆசுவாசப்படுத்தியது, அவர்களின் மூன்ற ஆண்டுகளுக்கான கேள்வியின் தீர்வை பரிசாக தந்தது. தண்ணீர் எத்தனை ரத்தத்தை பார்க்குமோ காலம் பதில்சொல்லும்.

திருப்பத்தூரார் நினைத்திருந்தால் அன்று மணல்மேல்  பட்டியினர் அனைவரும் கொலைக்களம் கண்டிருப்பர். ஆனால், அங்கு மானுடம் இன்னமும்  குடிகொண்டிருந்தது. நீருக்கான கலவரத்தை மலையோடு நிறுத்திக்கொள்ள நினைத்தனர்.

ராக்கப்பனின் தலைமையில் சமாதானம் பேசி முடிக்கப்பட்டது. கருப்பனின் மகன்கள் மூவருக்கும் திருப்பத்தூர் கண்மாயில் சிலை எடுத்து ஆலயம் கண்டனர். அவர்கள் காவலிருந்து மடிந்த அதே இடத்தில் அந்த ஆலயம் உருவானது. அவர்கள், திருப்பத்தூரின் அய்யன் ஆனார்கள். வருடம் திரும்பியதும், திருப்பத்தூர் மக்கள் குதிரை எடுத்து அய்யனுக்கு சாத்தி பெரும் விழா எடுத்தனர். மெல்ல, திருப்பத்தூர் அய்யனார் புகழ் சுற்று வட்டார கிராமங்கள் எங்கும் பரவியது.

அதைவிட முக்கியமாக, மணல்மேல்பட்டியில் ஒரு கண்மாய் வெட்ட முடிவு செய்தார்கள். அனைவருமாக சேர்ந்து ஒரு சமாதான கண்மாயை உருவாக்கினார்கள். இனி வரும் காலங்களில், திருப்பத்தூருக்கும் மணல்மேல்ப்படிக்கும் நீருக்கான பகை வராமல் பார்த்துக்கொண்டனர். மண்மேல் பட்டியினர், தாங்கள் எண்ணிக்கையில் சிறிதாக இருந்தாலும் தங்களோடு சமாதானம் கண்ட ராக்கப்பனை மனதார பாராட்டினார்கள். ராக்கப்பன், தன் குடும்பத்தார் இழப்பையும் மீறி சமாதானம் கண்டது அவரின் பெருந்தன்மையை பறைசாற்றியது. மணல்மேல்ப்படியினரின், திருப்பத்தூர் அய்யனார் வழிபாடும், ராக்கப்பனின் நட்பும் அடுத்துவரும் காலங்களில் மேலும் பெருகியது.

திருப்பத்தூர் அய்யனார், இன்றும் காவல் தெய்வமாக திருப்பத்தூர் கண்மாயில் தன் காவல் பணியை செய்வதாக மக்கள் நம்புகிறார்கள்.