தங்கம் தென்னரசு அவர்களது முகநூல் பதிவு:
கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கண்காட்சி அரங்கம் அமைத்திடும் பொறுப்பினைத் தலைவர் அவர்கள் வழங்கியிருந்தார். மாநாட்டில் துணை முதல்வர் தளபதி அவர்கள் முன்னிலையில் அது திறக்கப்பட்டது. பொதுமக்களின் பெரும் வரவேற்பினைப் பெற்ற அந்தக் கண்காட்சி, மாநாடு முடிந்தும் கூட சிலவாரங்கள் மக்கள் பார்வைக்கென நீட்டிக்கப்பட்டது.
அந்த அரங்கத்தின் முகப்பில் சிலப்பதிகார நாயகியான மாதவியின் எழிலார்ந்த சிலை ஒன்றினைப் பூம்புகாரில் உள்ள மாதவி சிலையை மாதிரியாகக் கொண்டு அமைக்கத் திட்டமிட்டிருந்தோம்.
மாநாட்டுப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இடையில் அவற்றைப் பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கிடவும், வேகப்படுத்தவும் வேண்டி முதல்வர் கோவைக்கு வந்திருந்தார். கண்காட்சி அரங்கத்திற்கானப் பணி முன்னேற்றத்தினைப் பல படியாக விளக்கிய நான், அப்போது கலை இயக்குனர் திரு. தோட்டா தரணி அவர்களின் கைவண்ணத்தில் உருவாகிக் கொண்டிருந்த மாதவி சிலையினைச் சுட்டிக் காட்டினேன்.
ஒரு வினாடி சிலையை ஏறிட்டு நோக்கிய தலைவர் அவர்களின் புருவம் லேசாக சுருங்கியதைக் கண்டேன். ஆயினும், நான் கண்காட்சியின் முக்கிய அம்சங்களை விவரித்ததை மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டு இருந்தார்.
அடுத்த பணிக்குப் போவதற்கான ஆயத்தம் தென்படும் போது என்னை மெதுவாக அருகில் அழைத்தார்.
“ எல்லாம் சரிதான்யா…ஆனால், அந்த மாதவியின் சிலை பூம்புகாரில் இருப்பது போல் இல்லை. குறிப்பா தலை அலங்காரமும், முக பாவனையும். பூம்புகார் போய் பார்“
நான் தலையசைத்துக் கொண்டேன். தொடர்ந்து எப்படித் திருத்த வேண்டும் என்று சொன்னார். முதல்வர் போனதும் திரு. தரணி அவர்களிடம் சொன்னேன். அவர் மறு நாளே பூம்புகார் போய்விட்டுத் தொலைபேசியில் அழைத்தார். அவரது குரல் முழுவதும் வியப்பு மேலோங்கி இருந்தது.
“ சார், சி.எம் எப்போ சார் இங்க வந்து பார்த்திருப்பார்?”
“ சரியா தெரியல சார். என் நினைவுக்கு எட்டிய வரையில் 89-90 ஆண்டுவாக்கில் வந்திருக்கலாம்.”
“ சார், என்னால நம்பவே முடியல . ஏதோ அவர் நேத்து வந்து பாத்துட்டு திருத்தம் சொன்னது போல சரி நுட்பமா இருக்கு”
நான் சொன்னேன்.
“ அது தான் சார் கலைஞர்!!