சென்னை:

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மறைந்த கருணாநிதியின் உருவச்சிலை வரும் 7ந்தேதி திமுக நாளிதழான முரசொலி அலுவலகத்தில் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி தயார் செய்யப்பட்டு வந்த சிலை, முரசொலி அலுவலகம் வந்தடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து சிலை அமைக்கும் பணிகள் துரிதமடைந்து உள்ளன.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவச் சிலை முரசொலி அலுவலகத்தில் திறக்கப்பட உள்ளது. இந்த சிலையை  மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி முதல மைச்சர் நாராயணசாமி, கேரள முதல்வர்  பினராயி விஜயன், காஷ்மீர் முன்னாள் முதல்வர்  பருக் அப்துல்லா உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.

இந்த விழாவில் கலந்துகொள்ள, தமிழகத்தை சேர்ந்த பல அரசியல் கட்சிகளுக்கு  அழைப்பு விடுக்கப் பட்டுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கும், நடிகர் ரஜினிகாந்த் உள்பட திரையுலக பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் விழாவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், திருவள்ளூரில் செய்யப்பட்ட சிலை, முரசொலி அலுவலகம் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, சிலை திறப்பு விழா ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.