சென்னை: சரித்திரத்தில் தனக்கான இடத்தினை கடைசி வரை போராட்டம் வழியாகவே பெற்ற மாபெரும் தலைவருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் திருவுருவச் சிலை” அமைக்கப்படுகிறது என திமுக தொண்டர்களுக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை நாளை திறக்கப்படுகிறது. இதை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இந்தியாவுக்கே வழிகாட்டும் முன்னோடியான திட்டங்களை வகுத்து, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி, சரித்திரத்தில் தனக்கான இடத்தினை கடைசி வரை போராட்டம் வழியாகவே பெற்ற மாபெரும் தலைவருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் திருவுருவச் சிலை”
– அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வரவேற்பு மடல்.
எழுச்சிமிகு சிந்தனையால்- ஏற்றமிகு பேச்சாற்றலால்- புரட்சிகர எழுத்துகளால் – புதுமையான திட்டங்களால், இந்தியத் திருநாடு எண்ணி எண்ணிப் போற்றுகிற வகையில், தமிழ்நாட்டின் மூத்த தலைவராகவும், திராவிட இயக்கத்தின் நெடும்பயணத்தில் முக்கால் நூற்றாண்டுக்கு மேல் ஓய்வின்றி உழைத்தவருமான நம் ஆருயிர்த் தலைவர் கலைஞர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் திருவுருவச் சிலை திறக்கப்படும் நாள் (மே 28), நம் அனைவருக்கும் தித்திப்பான நாள்! திசையெல்லாம் மகிழ்ச்சி பரவிடும் நாள்! ‘உடன்பிறப்பே..’ என்று தமது காந்தக் குரலால் அவர் நம்மை பாசத்துடன் அழைப்பது போன்ற உணர்வைப் பெறுகின்ற திருநாள்!
தனது கை உயர்த்தி, ஐந்து விரல்களைக் காட்டி மக்களின் செல்வாக்கைப் பெற்ற நம் உயிர்நிகர்த் தலைவரை, தமிழ்நாட்டு மக்கள் ஐந்து முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்கச் செய்தனர். தமிழ்நாட்டில் அதிக ஆண்டுகள் முதலமைச்சர் பொறுப்பை வகித்தவர் என்ற பெருமையும் நம் ஆருயிர்த் தலைவருக்கேயுரியது.
ஐந்தாவது முறை அவர் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தபோது, சென்னை அண்ணா சாலையில், எந்த ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்தை எழிலுடனும் வலிவுடனும் அமைத்தாரோ, அந்த ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலேயே அவருடைய திருவுருவச் சிலையை, தமிழ்நாட்டு முதலமைச்சர் என்ற பொறுப்பினைச் சுமக்கும் உங்களில் ஒருவனான என் தலைமையில், கழகத்தின் பொதுச்செயலாளரும் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சருமான அண்ணன் துரைமுருகன் அவர்கள் வரவேற்புரையாற்றிட, மாண்புமிகு இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு அவர்கள் நம் உயிரனைய தலைவரின் திருவுருவச் சிலையினை மே 28 சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணி அளவில் திறந்து வைத்திட இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து விழா நிகழ்ச்சிகள் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.
ஆங்கிலேயர் ஆட்சியில் ‘மவுண்ட் ரோடு’ எனப் பெயரிடப்பட்டு, உருவாக்கப்பட்ட சென்னையின் இதயப் பகுதிக்கு, ‘அண்ணா சாலை’ என்று பெயர் சூட்டியவரே நம் ஆருயிர்த் தலைவர்தானே!
தமிழ்நாடு என்று இந்த மாநிலத்திற்கே பெயர் சூட்டிய பேரறிஞர் பெருந்தகையின் பெயரினைத் தமிழ்நாட்டின் தலைநகரின் இதயம் போன்ற முக்கியச் சாலைக்குச் சூட்டி, பெருமை சேர்த்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டினை சென்னையில் நடத்தி, கடற்கரையில் தமிழ்ச் சான்றோர்களுக்கு சிலை அமைத்த முதலமைச்சர் அண்ணா அவர்களுக்கு, அண்ணா சாலையில் சிலை அமையக் காரணமாக இருந்தவரும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள்தான். தந்தை பெரியாருக்கு அண்ணா சாலையில் சிம்சன் நிறுவனம் அருகே, தி.மு.கழகத்தின் சார்பில் சிலை அமைத்து சிறப்பு சேர்த்தவரும் தலைவர் கலைஞர்தான்.
சென்னை மாநகராட்சியை முதன் முதலாக 1959-ஆம் ஆண்டில் தி.மு.கழகம் கைப்பற்றிடக் கடுமையாக உழைத்து, அந்த வெற்றிக்காக, பேரறிஞர் அண்ணாவிடம் கணையாழியைப் பரிசாகப் பெற்றவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவருடைய பேருழைப்பால் கழகம் வெற்றி பெற்ற சென்னை மாநகராட்சியின் சார்பில், அண்ணா சாலை ஜிம்கானா கிளப் அருகே பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு சிலை அமைப்பதற்குத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்களால் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் சிலை திறந்து வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் தனிப் பெருந்தலைவர்களுக்கு அண்ணா சாலையில் சிலை அமைந்திடக் காரணமாக இருந்த நம் ஆருயிர்த் தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஒரு சிலை அமைத்திட வேண்டும் என்பது தந்தை பெரியாரின் எண்ணம். பெரியார் அவர்கள் மறைவெய்திய பிறகு, அன்னை மணியம்மையார் அவர்கள் முயற்சி எடுத்து, திராவிடர் கழகத்தின் சார்பில் அண்ணா சாலையில் (இன்றைய தாராப்பூர் டவர்ஸ் சிக்னல் அருகே) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு சிலை அமைக்கப்பட்டது.
அரசியல் – பொதுவாழ்வில் நேரான பாதையில் பயணிக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுவது போல, தலையில் நேர்வகிடு எடுத்த இளமையின் விளிம்பிலான தலைவர் கலைஞர் அவர்களின் அழகிய தோற்றத்துடன் அமைந்த சிலை அது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் உடல்நலக்குறைவால் 1987-ஆம் ஆண்டு மறைவெய்தியபோது, அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட சில தீயசக்திகளால், அன்றைய அரசின் காவல்துறையின் முழு ஒத்துழைப்புடன் முத்தமிழறிஞர் சிலையினைக் கடப்பாரை கொண்டு தாக்கி, தகர்த்தெறிந்த அக்கிரமத்தை அண்ணாசாலை மவுன சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தது.
கழகத்தினர் துடித்தனர். தலைவர் கலைஞரால் கொள்கை உரமேறிய இளைஞர்கள் – மாணவர்கள் பதறினர். “எம்.ஜி.ஆர். உடல்நலமில்லாமல் இறந்ததற்குக் கலைஞர் சிலையை ஏன் உடைக்க வேண்டும்?” என்று பொதுமக்களும் கேட்டனர். எவனோ ஒருவன் தலைவரின் சிலையைத் தகர்க்கும் புகைப்படம் நடுநிலை ஏடுகளில் வெளியாகி, தமிழ்நாட்டையே கலங்க வைத்தது.
தலைவர் கலைஞர் அவர்களோ தன் சிலை தகர்க்கப்பட்ட நிலையிலும், சற்றும் மனம் தளராமல், தன் நெஞ்சத்தில் ஊறும் வற்றாத தமிழ் உணர்விலிருந்து சொற்களைத் தேர்ந்தெடுத்து, “செயல்படவிட்டோர் சிரித்து மகிழ்ந்தாலும்.. அந்த சின்னத் தம்பி என் முதுகில் குத்தவில்லை. நெஞ்சில்தானே குத்துகிறான். அதுவரையில் நிம்மதி எனக்கு” என்று காலம் கிழித்துப்போட முடியாத கவிதையினை வடித்து வழங்கினார்.
அந்த அண்ணா சாலையில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை நிறுவப்படுகிறது. வரலாற்றின் பக்கங்களிலிருந்து எவராலும் அகற்ற முடியாத தனிப்பெரும் சாதனையாளர் – தளராத உழைப்பாளி – சமரசமில்லாத சமூகநீதிப் போராளி நம் உயிர் நிகர் தலைவர் அவர்களின் திருவுருவச் சிலை திறக்கும் நிகழ்வு, சென்னையில் மகத்தான விழாவாக நடைபெறுகிறது. தலைநகராம் சென்னையையும் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளையும் நவீன காலத்திற்கேற்ப வடிவமைத்த ‘கலைஞர்’ அவர்தானே!
அய்யன் வள்ளுவரையும் அவர் தந்த குறளின் பெருமையையும் அன்னைத் தமிழ்நாட்டவர் மட்டுமின்றி அயல்நாட்டவரும் வியக்கும் வகையில் அமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம், அரை நூற்றாண்டுக்கு முன்பே அண்ணா மேம்பாலம், புத்தாயிரம் ஆண்டின் போக்குவரத்தை சமாளிக்கும் வகையில் கத்திப்பாரா மேம்பாலம், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைக் காட்டும் டைடல் பார்க், விரைவான பொதுப் போக்குவரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம், சர்வதேசத் தரத்தில் அறிவுக் கோபுரமாகத் திகழும் அண்ணா நூற்றாண்டு நூலகம், ஆசியாவின் மிகப் பெரிய கோயம்பேடு பேருந்து நிலையம் என எத்திசை பயணித்தாலும் அவர் பெயரை உச்சரிக்கும் அடையாளங்களே தமிழ்நாட்டின் தலைநகரெங்கும் நிறைந்துள்ளன.
தலைநகரம் மட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டமும் அவற்றின் கிராமம் – நகரங்களும் அவரது ஆட்சியில்தான் காலத்திற்கேற்ற கட்டமைப்பு வசதிகளுடன் வளர்ச்சி பெற்றன. தமிழ்நாட்டின் தெற்கு எல்லையான குமரி முனையில் வானுயர்ந்து நிற்கும் அய்யன் வள்ளுவரின் சிலைபோல முத்தமிழறிஞரின் ஆட்சித்திறனும் அவர் புகழும் உயர்ந்து நிற்கின்றன. குமரிமுனை வள்ளுவர் சிலை போல, சுனாமிகளே வந்தாலும் எதிர்கொண்டு வெல்கின்ற ஆற்றலைக் கொண்டது நம் உயிர் நிகர்த் தலைவர் கலைஞர் அவர்களின் புகழ்.
அண்ணா அறிவாலயத்தில் அவருக்குத் திருவுருவச் சிலை கண்டோம். திருச்சியில், ஈரோட்டில், தூத்துக்குடியில் இன்னும் பல நகரங்களில் கழகத்தின் சார்பில் சிலை அமைத்து மகிழ்ந்தோம். அதனை இன்னும் பல ஊர்களிலும் தொடர்கிறோம்.
அவர் சிலையாக மட்டுமல்ல, நம் நெஞ்சில் நிலையாக வீற்றிருந்து கொள்கை முழக்கம் செய்து கொண்டே இருக்கிறார். இயற்கை அவரை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டாலும், நம் இதயத்துடிப்பினில் அவரே நிறைந்திருக்கிறார். எந்நாளும் வழிநடத்துகிறார். மக்கள் நலன் காக்கும் திராவிட மாடல் அரசு என்பது அவர் நமக்கு வகுத்துத் தந்த ஆட்சிக்கான இலக்கணம்.
அந்த இலக்கணத்தின்படி, இந்தியாவுக்கே வழிகாட்டும் முன்னோடியான திட்டங்களை வகுத்து, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி, சரித்திரத்தில் தனக்கான இடத்தினை கடைசி வரை போராட்டம் வழியாகவே பெற்ற மாபெரும் தலைவருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் திருவுருவச் சிலை திறக்கப்படுவதை எண்ணி, உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன்; நெகிழ்கிறேன்!
முதலமைச்சர் என்ற முறையில் விழாவை சிறப்பித்துத் தர வேண்டும் என உடன்பிறப்புகளான உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்!