சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் மறைந்த திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி உருவப்படம் திறக்கப்பட உள்ளது. இந்த படத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்டு முதல் வாரத்தில் தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டப்பேரவை வளாகத்தில், நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களை கவுரவிக்கும் வகையில் மறைந்த தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ராஜாஜி, திருவள்ளுவர், சி.என்.அண்ணாதுரை, காமராஜர், பெரியார், அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், காயிதே மில்லத், முகமது இஸ்மாயில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ராமசாமி படையாச்சியார், வ.உ.சி, ப.சுப்புராயன், ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் ஆகிய 15 பேரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. 16வது படமாக மறைந்த முன்னாள்முதல்வர் கருணாநிதியின் படம் இடம்பெற உள்ளது. இதற்கான ஏற்பாட்டினை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு செய்து வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைக்கவும், மெரினாவில் 75ஆவது ஆண்டு சுதந்திர தின நினைவுத் தூணை திறந்துவைக்கவும், குடியரசு தலைவரை அழைக்கும் வகையில் கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை நேரில் அழைத்தார். அப்போது, அவர் தமிழ்நாடு வர சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆகஸ்டு 3ந்தேதி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள வெலிங்டன் கல்லூரியில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வர உள்ளதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் சென்னையில் கருணாநிதி உருவப்படத்தை சட்டப்பேரவையில் திறந்து வைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறத.
இதுதொடர்பாக, விரைவில் தமிழ்நாடு அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.