சென்னை:
புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ள நாராயணசாமி, சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை இன்று நேரில் சந்தித்தார்.
தமிழகத்தைப் போலவே கடந்த 16ம் தேதி புதுச்சேரியிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதில், மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களையும், கூட்டணி கட்சியான திமுக 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி அங்கு அமைகிறது.
கடும் எதிர்ப்புக்கு மத்தியில், புதுச்சேரி முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் புதுச்சேரி முதல்வராக பதவியேற்க இருக்கும் நிலையில், இன்று சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை நாராயணசாமி சந்தித்தார்.
பிறகு செய்தியாளர்களடம் பேசிய அவர், “மாநில வளர்ச்சிக்காக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம். மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தியும், வளர்ச்சி பாதையில் மாநிலத்தை கொண்டு சென்றும் புதுச்சேரியை முன்மாதிரி மாநிலமாக மாற்றுவோம். மரியாதை நிமித்தமாக கருணாநிதியை இன்று சந்தித்தேன்” என்றார்.
தற்போது சட்டமன்ற உறுப்பினராக இல்லாத நாராயணசாமி, ஆறுமாதங்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். புதுவை சட்டமன்றத்தில் 15 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இருந்தும் யாரும், நாராயணசாமிக்காக தங்கள் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இல்லை. இந்த நிலையில், அங்கு இரண்டு இடங்களை வென்றுள்ள தி.மு.க., ஒரு இடத்தை ராஜினாமா செய்து நாராயணசாமிக்கு வழிவிடுவதாக பேச்சு அடிபடுகிறது. (இது குறித்து நேற்றே patrikai.com இதழில் எழுதியிருந்தோம்) இந்த நிலையில் நாராயணசாமி, கருணாநிதி சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.