சென்னை:

திமுக தலைவர் கருணாநிதி நேற்று இரவு திடீரென கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்துக்கு வந்தார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல்நலமில்லாமல் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று இரவு முரசொலி அலுவலகம் வந்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள பவள விழா கண்காட்சி அறையை நெகிழ்வுடன் பார்த்து வியந்தார். வயது முதிர்ச்சி காரணமாகவும்,  உடல்நலக் குறைவாலும் கடந்த ஓராண்டாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த திமுக தலைவர் கருணாநிதி, முரசொலியின் பவள விழாவில்கூட கலந்துகொள்வதை தவிர்த்து வந்தார்.

தற்போது உடல்நலம் தேறிய நிலையில் நேற்று இரவு முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி வந்தார். சுமார் 40 நிமிடம் முரசொலி வளாகத்தில் இருந்த அந்த தருணம் திமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இரவு 7 மணி:  திமுக தலைவர் கருணாநிதி திடீரென்று முரசொலி அலுவலகத்திற்கு வந்தார். அவரை முரசொலி செல்வமும், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் வரவேற்று அழைத்து சென்றனர்.

வீல் சேரில் முரசொலி பவள விழா கண்காட்சியை ஓவ்வொரு அரங்காக சென்று பார்வையிட்டார். அவரை அவரது பாதுகாவலர் மெதுவாக அழைத்துச்சென்றார். ஒவ்வொரு புகைப்படத்தையும் உற்றுப்நோக்கினார்.

அதைத்தொடர்ந்து கருணாநிதியை வீல் சேருடன் மு.க.ஸ்டாலின் அழைத்துச்சென்று மேலும் பல புகைப்படங்களை காண்பித்து அவருக்கு நினைவூட்டினார்.

ஒவ்வொரு அறையையும் குறைந்தது 10 நிமிடங்கள் வரை நிதானமாக சுற்றிப்பார்த்து ரசித்தார்.

முரசொலி வளர்ச்சியின் பல்வேறு கட்டங்கள், பழைய கால அச்சு இயந்திரம், சட்டப்பேரவையில் முரசொலி செல்வம் கூண்டில் நிறுத்திய காட்சி ஆகியவற்றை கருணாநிதி உன்னிப்பாக கவனித்தார்.

கருணாநிதி அமர்ந்திருப்பது போன்ற மெழுகு சிலையை வைக்கப்பட்டுள்ள அறைக்கு சென்றார், மெழுகு சிலையை கருணாநிதி கவனித்தார். சுமார் 40 நிமிடங்கள்  அவர்  அரங்கை பார்வையிட்டார்.

அரங்கை விட்டு வெளியே வந்து முரசொலி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள முரசொலி மாறன் சிலையை சற்று நேரம்  கருணாநிதி உற்று பார்த்தார்.

இரவு 7.40 மணி: அரங்கை பார்த்துவிட்டு  அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

கருணாநிதியுடன் மு.க.தமிழரசு, செல்விசெல்வம், துரைமுருகன், ஏ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்டோர் உடன் வந்திருந்தனர்.

திமுக தலைவர் கருணாநிதி முரசொலி அலுவலகம் வந்த தகவல்கள் அறிந்ததும் பத்திரிக்கையாளர்களும், திமுகவினரும், பொதுமக்களும் ஏராளமான அளவில் அப்பகுதியில் திரண்டனர்.

ஓராண்டுக்கு பிறகு கருணாநிதியை நேரில் பார்த்த தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

கடந்தாண்டு முரசொலி மாறன் பிறந்த நாளன்று திமுக தலைவர் கருணாநிதி முரசொலி அலுவலகம் வந்து முரசொலி மாறன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு, முரசொலி அலுவலகத்திற்கு நேற்றுதான் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முரசொலி பவளவிழா கடந்த ஆகஸ்ட்  மாதம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் கண்காட்சி அரங்கம் ஆகஸ்டு 10ம் தேதி தொடங்கி அக்டோபர் 10ம் தேதி நிறைவடைந்தது.  இந்த அரங்கினை மாணவர்கள், மாணவிகள், பொதுமக்கள் என 87 ஆயிரம் பேர்  கண்டுகளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.